நகை அடகு கடையில் பணம் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
நகை அடகு கடையில் பணம் திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த அ.புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கைக்காட்டியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்ற அவர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடைக்குள் சென்று பார்த்தபோது, ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்ததும், பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததால் நகைகள் தப்பியதும் தெரியவந்தது. மேலும் கடையின் வெளியில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தும், உள்ளே இருந்த கேமராவை திருப்பி வைத்துவிட்டும் இந்த திருட்டில் மர்மநபர் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று அ.புதுபட்டியைச் சேர்ந்த சதீஷ்குமாரை(வயது 29) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.