பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை


பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Oct 2023 2:45 AM IST (Updated: 6 Oct 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் காதலி பேச மறுத்ததால் கழுத்தை பிளேடால் அறுத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர்

கோவையில் காதலி பேச மறுத்ததால் கழுத்தை பிளேடால் அறுத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இளம் பெண்ணுடன் காதல்

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரெனில்குமார் (வயது 35). இவர் கோவை பெரியக்கடை வீதியில் தங்கி இருந்து செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களின் காதலை வளர்த்து வந்தனர். கடந்த வாரம் இளம் பெண்ணுக்கும், ரெனில்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரிடம் இளம் பெண் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை

இதனால் ரெனில்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி அவர் முதலில் விஷத்தை குடித்தார். அதன்பிறகு பிளேடால் கை மற்றும் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரெனில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெனில்குமாரின் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரெனில்குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story