அம்பத்தூரில் வாலிபர் கடத்தி கொலை - தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 9 பேர் கைது


அம்பத்தூரில் வாலிபர் கடத்தி கொலை - தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 9 பேர் கைது
x

அம்பத்தூரில் வாலிபரை கடத்திக்கொலை செய்த தி.மு.க. பிரமுகரின் மகன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். தற்போது இவர், திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

இவருடைய நண்பரான அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த ஜீவா (26) என்பவரது வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த மோசஸ் (35) தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். இதனை தட்டிக்கேட்ட ஜீவாவை, மோசஸ் கடுமையாக தாக்கினார். இதுபற்றி அம்பத்தூர் போலீசில் ஜீவா புகார் செய்தார்.

இதையறிந்த உதயகுமார், தனது நண்பன் ஜீவாவை தாக்கிய மோசஸ் வீட்டுக்கு சென்று அவரது தாயாருடன் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மோசஸ், தனது நண்பர்களுடன் சேர்ந்து உதயகுமாரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்திச்சென்றார்.

பின்னர் சண்முகபுரம் அடுத்த தாமரைக்குளம் பகுதியில் உள்ள முட்புதருக்குள் வைத்து உதயகுமாரை வெட்டினார். அவர்களிடம் இருந்து தப்பிக்க உதயகுமார் அங்கிருந்து ஓடினார். ஆனாலும் அவர்கள் விடாமல் ஓட ஓட விரட்டி உதயகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான உதயகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தி.மு.க. பிரமுகரின் மகனான சரண் (19), அப்புன் (35), மாணிக்கம் (24), முகுந்தன் (21), சாமுவேல் (20), வினோத் குமார் (40), பிராங்கிளின் (23), மாரிஸ் (19) மற்றும் ராமமூர்த்தி (19) ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான மோசஸை தேடி வருகின்றனர்.


Next Story