படப்பையில் இளைஞர் திறன் திருவிழா, வேலைவாய்ப்பு முகாம்; நாளை மறுநாள் நடக்கிறது


படப்பையில் இளைஞர் திறன் திருவிழா, வேலைவாய்ப்பு முகாம்; நாளை மறுநாள் நடக்கிறது
x

படப்பையில் இளைஞர் திறன் திருவிழா, வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இளைஞர் திறன் திருவிழா மற்றும் நேரடி வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. தீன் தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும், இளைஞர் திறன் திருவிழா மூலம் தேர்வு செய்து பல்வேறு தனியார் துறைகளின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தனியார் துறை நிறுவனங்கள் மூலமாக நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட தொழில் மையம், மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களின் மூலம் அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுகலை, டிரைவிங், உதவி நர்சு, கணினி, சில்லறை வணிகம், மென்பொருள் உருவாக்குதல், துரித உணவு தயாரித்தல், மொபைல் போன் பழுது நீக்குதல் போன்ற திறன் பயிற்சிகள் பல்வேறு தகுதிவாய்ந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தனியார் நிறுவனங்களில் பணியாற்ற ஏதுவாக இந்த பயிற்சிகளுக்கு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்று தகுதியான பயிற்சியை தேர்வு செய்து பயன் பெறுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story