மயிலம் அருகே கத்தியால் குத்தி வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு


மயிலம் அருகே கத்தியால் குத்தி வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

மயிலம் அருகே கத்தியால் குத்தி வாலிபரிடம் செல்போன், பணத்தை பறித்து சென்ற மர்மநபர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

மயிலம்,

லிப்ட் கேட்ட மர்மநபர்

திருக்கோவிலூர் அடுத்த அருங்குருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் தமிழ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் சென்னையிலிருந்து கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று கொண்டிருந் தார் . திண்டிவனம் அடுத்த சலவாதி என்ற இடத்தில் சென்ற போது மர்ம நபர் ஒருவர் மொபட்டை மறித்து அவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது அவா் நீங்கள் செல்லும் வழியில் சிறிது தூரத்தில் நான் இறங்கி விடுவதாக கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய தமிழ் மொபட்டில் அந்த மர்மநபரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

செல்போன், பணம் பறிப்பு

மயிலம் அருகில் ஜக்காம்பேட்டை பகுதியில் சென்றபோது அந்த மர்மநபர் தமிழிடம் நான் சிறுநீர் கழிக்க வேண்டும், மொபட்டை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து மொபட்டை தமிழ் நிறுத்தியபோது லிப்ட் கேட்டவரும், அங்கு மறைந்திருந்த மேலும் 2 பேர் ஆகியோர் சேர்ந்து உன்னிடம் இருக்கும் பணம், செல்போனை கொடு, என்று மிரட்டியுள்ளனர். இதற்கு தமிழ் மறுத்ததால் அந்த மர்மநபர்கள் 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி, கத்தியால் முதுகில் குத்தினர். இதையடுத்து அவரிடம் இருந்த ரூ. 500 பணம் மற்றும் செல்போனை அந்த மர்மநபர்கள் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதில் காயம் அடைந்த தமிழை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாாின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிப்ட் கேட்டு வழப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story