பள்ளி பஸ்களை சேதப்படுத்திய வாலிபர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் சரண்


பள்ளி பஸ்களை சேதப்படுத்திய வாலிபர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் சரண்
x

கனியாமூர் கலவரத்தில் டிராக்டர் மூலம் பள்ளி பஸ்களை சேதப்படுத்திய வாலிபர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் சரண்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கு நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் டிராக்டர் மூலம் பள்ளிக்கு சொந்தமான பஸ்களை இடித்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர். மேலும் கலவரம் சம்பந்தமான வீடியோ, புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு தொடர்புடைய நபர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பள்ளியில் நடந்த கலவரத்தில் டிராக்டர் மூலம் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை இடித்து சேதப்படுத்தியது தொடர்பாக சின்னசேலம் தாலுகா பங்காரம் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் மகன் ஜெயவேல்(வயது 22) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதையறிந்த ஜெயவேல் நேற்று கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதி மன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு முகமது அலி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயவேலை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

1 More update

Related Tags :
Next Story