2 பஸ்களை சேதப்படுத்திய வாலிபர் கைது
சீர்காழி அருகே 2 பஸ்களை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள கோவில்பத்து கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மகன் செந்தில்நாதன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு சீர்காழி அருகே உள்ள கொண்டல் மதகடி அருகே நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து தகராறு செய்தார். அப்ேபாது வடரெங்கம் கிராமத்தில் இருந்து சீர்காழி நோக்கி வந்த அரசு பஸ்சை வழிமறித்து பஸ்சின் முன்புற கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவர் தியாகராஜன்(59) என்பவரையும் தாக்கியுள்ளார். இதில் தியாகராஜன் படுகாயம் அடைந்தார்.
இதேபோல் சீர்காழியில் இருந்து கொண்டால் கிராமத்தை நோக்கி சென்ற ஒரு மினி பஸ்சை வழிமறித்து கட்டையால் மினி பஸ்சின் முன்புற கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் அங்கு வந்து செந்தில்நாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.