குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான்: நடவடிக்கை எடுத்த தமிழக அரசு


குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான்: நடவடிக்கை எடுத்த தமிழக அரசு
x

கோப்புப்படம்

மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்பான் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

யூடியூபர் இர்பான் என்பவர் தான் துபாய் சென்றபோது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை (பெண்) என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டுள்ளார். அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின்போது அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வினை வீடியோவாக எடுத்து 19.05.2024 அன்று தனது யூடியூப் சேனலின் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர்.

இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும், அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.

எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரால் இர்பானுக்கு 21.05.2024 அன்று பாலினத்தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பாணை சார்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இர்பானால் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கிட யூடியூப் தளத்திற்கும், சைபர் கிரைம் பிரிவிற்கும் 21.05.2024 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்டர்கள், ஆஸ்பத்திரிகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story