கொடைக்கானல் எழும்பள்ளம் ஏரியில் 'ஜிப்லைன்' சாகசம் அறிமுகம்

கொடைக்கானல் மன்னவனூர் எழும்பள்ளம் ஏரியில், பொழுதுபோக்கு அம்சமாக ‘ஜிப்லைன்’ சாகசம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் வரவேற்று உள்ளனர்.
'ஜிப்லைன்' சாகசம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூர் பகுதியில், வனத்துறையின் சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக பரிசல் சவாரி, தனிநபர் படகுசவாரி மற்றும் குதிரை சவாரி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் எழும்பள்ளம் ஏரியில் 'ஜிப்லைன்' சாகசத்தை செயல்படுத்த வனத்துறை முடிவு செய்தது. இதற்காக ஏரியின் இரு கரைகளிலும் ராட்சத தூண் அமைக்கப்பட்டு, அதில் சுமார் 245 மீட்டர் நீள இரும்பு வடம் இணைக்கப்பட்டது. இந்த வடத்தில் பிணைக்கப்பட்ட கயிற்றில், பொதுமக்கள் தொங்கியபடி சாகசத்துடன் பயணிக்கலாம்.
இதன் மூலம் ஏரியின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு சுமார் 5 நிமிடத்தில் செல்ல முடியும். 40 நாட்கள் சோதனை ஓட்டம் நடந்த நிலையில் நேற்று முதல் 'ஜிப்லைன்' சாகசம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணித்தனர்.
சுற்றுலா பயணிகள் வரவேற்பு
இதுகுறித்து வனச்சரகர் நாதன் கூறுகையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த சாகச நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தினமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பயணிகள் இதில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பயண கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. இதில் 45 கிலோ முதல் 75 கிலோ எடை உள்ளவர்கள் மட்டுமே செல்லலாம்.
மாவட்ட வனஅலுவலர் திலீப் ஆலோசனைப்படி வனவர்கள் விநாயகமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் இதை கண்காணித்து வருகின்றனர். அறிமுகம் செய்யப்பட்ட நேற்று ஒரே நாளில் 28 பேர் பயணம் செய்து உள்ளனர்.
சுற்றுலா பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் உள்ள இந்த சாகசத்ைத சுற்றுலா பயணிகள் மிகவும் வரவேற்று உள்ளனர். மேலும் இங்கு சுற்றுலா பயணிகளுக்கான தங்கும்விடுதியும், சிறுவர் பூங்காவும் விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார்.






