ஈரோடு கிழக்கு தொகுதி- ஒரு கண்ணோட்டம்


ஈரோடு கிழக்கு தொகுதி- ஒரு கண்ணோட்டம்
x
தினத்தந்தி 3 March 2021 4:03 AM IST (Updated: 3 March 2021 12:03 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி- ஒரு கண்ணோட்டம்

மிழ்நாட்டின் முக்கிய தொழில் மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டத்தின் தலைநகராக இருப்பது ஈரோடு. 2008-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்ந்து செயல்படுகிறது ஈரோடு. மிகப்பெரிய பரப்பளவை கொண்ட ஈரோடு மாநகராட்சி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என்ற 2 சட்டமன்ற தொகுதிகளை தன்னுள் அடக்கி இருக்கிறது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில் 98-வது எண் தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி குறைந்த பரப்பளவில், அதிக வாக்காளர்களை கொண்டு இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

 பழைய ஈரோடு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள் முழுமையாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் உள்ளன. பழைய ஈரோடு நகராட்சிக்கு உள்பட்ட 40 வார்டு பகுதிகள், வீரப்பன்சத்திரம் நகராட்சிக்குள் இருந்த பகுதிகள், பி.பி.அக்ரகாரம் பேரூராட்சி பகுதிகள்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான எல்லையாக இருக்கின்றன. மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர்.

 ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இருந்து இயங்கி வருகிறது. இதுவரை நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. 2011-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டில் நடந்த தேர்தலில், அவர் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கினார். ஆனால், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். கே.எஸ்.தென்னரசு ஏற்கனவே 2001-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

ஈரோடு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்று. மஞ்சள் சந்தை, ஜவுளி சந்தை என்று பெருமைக்கும், புகழுக்கும் உரிய சந்தைகள் இங்கு கூடுகின்றன.

சுதந்திரத்துக்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவரது பெரும் போராட்டத்தாலும், தியாகத்தாலும் பவானிசாகர் அணை கட்டும் முயற்சி தொடங்கப்பட்டது. ஈரோடு தொகுதி மக்கள் மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்கள் என்றும் மறக்க முடியாத மாமனிதராக போற்றப்பட வேண்டிய தியாகி எம்.ஏ. ஈஸ்வரன் ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் தொகுதிகள் 1951-ல் சீரமைக்கப்பட்டன. அப்போது நடந்த முதல் தேர்தலில் இந்திய பொதுவுடமைக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஜூ வெற்றி பெற்றார். அப்போது வாக்குரிமை பெற்றவர்கள் குறைந்த அளவில் இருந்தனர். அப்போது அவர் பெற்ற மொத்த வாக்குகள் 21 ஆயிரத்து 251.

1957-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வி.எஸ்.மாணிக்கசுந்தரம் 19 ஆயிரத்து 12 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏ.எஸ்.தட்சிணாமூர்த்தி கவுண்டர் போட்டியிட்டு 32 ஆயிரத்து 895 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

1967-ம் ஆண்டுக்கு பின்னர் ஈரோடு தொகுதியின் வெற்றி சரித்திரம் மாற்றி எழுதப்பட்டது. இந்த தேர்தலில் மு.சி.என்று தி.மு.க.வினரால் போற்றப்பட்ட மு.சின்னச்சாமி போட்டியிட்டு 45 ஆயிரத்து 471 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 1971-ம் ஆண்டு மா.சு என்று ஈரோடு மக்களால் அழைக்கப்பட்ட மா.சுப்பிரமணியன் 47 ஆயிரத்து 809 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

1977-ம் ஆண்டு இந்த சரித்திரம் மாற்றப்பட்டது. அ.தி.மு.க. தேர்தல் களத்துக்கு வந்தது. ஈரோடு மாவட்டத்தின் அடையாளங்களான கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், விளையாட்டு மைதானம், ஐ.ஆர்.டி.டி. கல்லூரிகள் என்று அனைத்தும் உருவாக காரணமாக இருந்தவர் என்று ஈரோட்டு மக்கள் கை காட்டும் சு.முத்துசாமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 37 ஆயிரத்து 968 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1980-ம் ஆண்டு, 1984-ம் ஆண்டுகளிலும் சு.முத்துசாமி வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
1989-ம் ஆண்டு ஈரோடு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது.

 சுப்புலட்சுமி ஜெகதீசன் 68 ஆயிரத்து 128 வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்தார். 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் சி.மாணிக்கம் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் என்.கே.கே.பெரியசாமி வெற்றி பெற்றார். இதுபோல் 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். 2006-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் என்.கே.கே.பி.ராஜா வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலுடன் ஈரோடு தொகுதி முற்று பெற்றது. 2008-ம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஈரோடு தொகுதி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என்று மாற்றம் பெற்றது.

மறுசீரமைப்புக்கு பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

ஈரோடு தொகுதி நட்சத்திர அந்தஸ்து தொகுதியாகவே இருந்தது. சு.முத்துசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், என்.கே.கே.பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா ஆகியோர் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் கடந்த 2 முறைகளாக வெற்றி பெற்றவர்கள் அமைச்சர் ஆகும் வாய்ப்பினை பெறவில்லை. இதனால் ஈரோடு கிழக்கு முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் பிரச்சினைகளும் முக்கியத்துவம் இல்லாமல் மாறிவிட்டது.

காவிரிக்கரையோர தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. ஈரோட்டில் சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லாதநிலையில் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையை பொழுதுபோக்கு இடமாக மாற்றும் எந்த திட்டமும் இல்லை. இப்படி பல இல்லைகள் இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளன.

குறிப்பாக நீண்டகால கோரிக்கையான மேம்பாலம் கட்டப்பட்டது. அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது. வ.உ.சி.பூங்கா மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. கனிமார்க்கெட் ஜவுளி பூங்கா கட்டுமான பணிகள், நேதாஜி காய்-பழங்கள் சந்தை கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன. ஈரோடு மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குப்பை மேலாண்மை சிறப்பாக செய்யப்படும் தொகுதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதி முக்கியமானதாக இருக்கிறது.

ஈரோடு மக்களின் நீண்ட கால கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு இருப்பது சிறந்த சாதனையாகும். நகர் பகுதியில் புதைவட மின்சார கேபிள்கள் புதைக்கப்பட்டு இருப்பது சாலையில் மின்கம்பங்கள் இல்லாத ஒரு நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. குடிசை மாற்று வாரியம் மூலம் புதிய அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டி இருப்பது ஏழை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியை பல்துறை மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஈரோடு மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்து உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் தலைநகரின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் சாலை பணிகள் முழுமைப் படுத்தப்படாமல் இருப்பது குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. புழுதிகள் பறக்கும் சாலைகள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகள் வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேறும்போது வந்த பாதிப்புகள் என்றாலும், உடனடியாக அவற்றை சீரமைக்காமல் இருப்பதே பொதுமக்களின் வேதனைக்கு காரணமாகும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள், முதலியார் சமூகத்தினர் இந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். ஆதிதிராவிட மக்களும் கணிசமாக உள்ளனர். சமீப காலமாக வட இந்திய வணிகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஈரோடு மக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த ஜவுளி சந்தை வடமாநிலத்தவர்களின் கைகளுக்குள் இருக்கிறது. ஈஸ்வரன்கோவில் வீதி சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலும் வணிகம் வடமாநிலத்தவர்கள் கைகளில் உள்ளது. ஜவுளி, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து வணிகமும் ஈரோட்டு முதலாளிகளின் கையில் இருந்து சென்று கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் 2021-ம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்வமாக இருக்கிறார்கள். மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சிகளுடன் சில சுயேச்சைகளும் களத்தில் மோத தயாராக இருக்கிறார்கள். இந்த தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் சவாலான தேர்தல்தான். யாரை தேர்ந்து எடுப்பது என்பதைவிட, தொகுதியின் வளர்ச்சிக்கு யார் வந்தால் நன்றாக இருக்கும் என்று சிந்தித்து தேர்ந்து எடுப்பதே சிறப்பானதாக இருக்கும்.

Next Story