அ.தி.மு.க- தே.மு.தி.க.தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி இன்று பிரேமலதா விஜயகாந்தை சந்திக்கும் அதிமுக குழு


அ.தி.மு.க- தே.மு.தி.க.தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி  இன்று பிரேமலதா விஜயகாந்தை சந்திக்கும் அதிமுக குழு
x
தினத்தந்தி 3 March 2021 10:46 AM IST (Updated: 3 March 2021 10:46 AM IST)
t-max-icont-min-icon

விஜயகாந்த் பிரேமலதாவை அதிமுக குழு இல்லத்தில் சந்திக்க திட்டமிட்டு உள்ளது. தேமுதிகவின் நீண்டகால கோரிக்கையான ராஜ்யசபா சீட்டு கனவு நிறைவேறுமா? என தெரியவரும்.

சென்னை:

அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே நேற்று நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இறுதியாவதில் இழுபறியே நீடிக்கிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தாலும் தங்களை இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொந்தளித்து வந்தார். நிர்வாகிகள் கூட்டத்திலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் தனது ஆதங்கத்தையும் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியபோதே, அ.தி.மு.க. தரப்பில் தே.மு.தி.க.வுக்கும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்துகொள்ளாத சூழலில் தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகளுடன், அ.தி.மு.க. அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் இறங்கியது. இந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. காரணம், பா.ம.க.வுக்கு வழங்கியதை விட அதிகமான தொகுதிகளை தே.மு.தி.க. கேட்டது தான்.

இந்த நிலையில் மறுநாளே (கடந்த 1-ந் தேதி) அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு, அ.தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதனை தே.மு.தி.க. மறுத்ததுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவும் இல்லை. இதையடுத்து அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் தே.மு.தி.க.வை கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதேவேளை தே.மு.தி.க.வினருடன், தி.மு.க. மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
திமுகவுடனும் தேமுதிக பேசி வருவதாக கூறப்படுவதால், அக்கட்சி மீது அதிமுக அதிருப்தி அடைந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு, அ.தி.மு.க. அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை ஏற்று தே.மு.தி.க. அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் மாலை 5.40 மணிக்கு வந்தனர்.

அங்கு அவர்களுடன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் 3-ம் கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரவு 7.10 மணி வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது. அதாவது பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகள் வேண்டும் அல்லது 20 தொகுதிகளாவது ஒதுக்கவேண்டும் என்று தே.மு.தி.க. கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அ.தி.மு.க. தயங்கியதாகவும், பலமுறை கேட்டுப்பார்த்தும் தே.மு.தி.க. தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பிரேமலதா அல்லது சுதீஷ் என யாராவது ஒருவர் வந்தால் பேசி முடிவெடுக்கலாம் என்றும், சுதீஷ் வெளியிட்ட பேஸ்புக் பதிவு குறித்தும் பேசப்பட்டது. இறுதியாக தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்குவதாகவும், தலைமையிடம் கேட்டு அதற்கு பின் முடிவெடுக்கும் படியும் அதிமுக குழுவினர் தெரிவித்தனர்.

இதனால் அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு இறுதியாவதில் தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது. அதேவேளை அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தே.மு..தி.க.வுக்கு, அ.தி.மு.க. அழைப்பு விடுக்கும் என்றே அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது

இந்த் நிலையில் அதிமுக - தேமுதிக இடையே சென்னையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.விஜயகாந்த் பிரேமலதாவை அதிமுக குழு அவரது இல்லத்தில் சந்திக்க திட்டமிட்டு உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில்  12 முதல் 15 தொகுதிகள் ஒதுக்குவதுடன் தேமுதிகவின் நீண்டகால கோரிக்கையான ராஜ்யசபா சீட்டு கனவு நிறைவேறுமா?  என தெரியவரும் 

அதிமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான த.மா.கா.வுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், இதுதவிர பாஜக, பாமக, தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு இன்று மாலைக்குள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.காலை 11 மணிக்கு மேல் த.மா.கா கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.

Next Story