தேனாம்பேட்டையில் இருந்து ஆலந்தூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு மெட்ரோ ரெயிலில் வந்த கமல்ஹாசன்


தேனாம்பேட்டையில் இருந்து ஆலந்தூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு மெட்ரோ ரெயிலில் வந்த கமல்ஹாசன்
x
தினத்தந்தி 4 March 2021 2:10 AM GMT (Updated: 4 March 2021 2:10 AM GMT)

ஆலந்தூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தேனாம்பேட்டையில் இருந்து ஆலந்தூருக்கு மெட்ரோ ரெயிலில் வந்திறங்கினார்.

ஆலந்தூர், 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சென்னையை அடுத்த ஆலந்தூர் தொகுதியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர், இதற்காக தேனாம்பேட்டையில் இருந்து ஆலந்தூருக்கு மெட்ரோ ரெயிலில் வந்தார்.

கமல்ஹாசனை வரவேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும், அவரை காண பொதுமக்களும் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு குவிந்தனர். மெட்ரோ ரெயிலில் இருந்து இறங்கி வெளியே வந்த கமல்ஹாசன், அங்கு தயாராக நிறுத்தி இருந்த பிரசார வேனில் ஏறி அங்கு கூடி நின்ற மக்களை பார்த்து கும்பிட்டும், டார்ச் லைட் சின்னத்தை காட்டியும் ஓட்டு கேட்டார்.

பிரசாரம்

சுமார் 10 நிமிடங்கள் அவரது பிரசார வாகனம் அங்கு நிறுத்தப்பட்டதால் மீனம்பாக்கம் நோக்கி செல்லும் பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதியில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். ஆலந்தூர் மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

ராஜினாமா

எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு நிபந்தனை போட்டு தான் அனுப்புகிறோம். ஊர் பெரியவர்களுடன் அமர்ந்து, தொகுதி மக்களின் குறைகளை இந்த காலத்துக்குள் முடிப்பேன் என பத்திரத்தில் எழுதி கையெழுத்திடுவார். அதில் நானும் ஜாமீன்தாராக கையேழுத்திடுவேன்.

அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின் அவர் கூறிய வாக்குறுதிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாவிட்டால் அவர் பதவியை பறிக்கும் அதிகாரம் உங்களுக்கு அளிக்கப்படும். அவரை நானே ராஜினாமா செய்யச்சொல்லுவேன். கமிஷன் விளையாட்டு விளையாடினால் முடியாது.

தமிழகம் விற்பனைக்கு அல்ல. நானும் அப்படி தான். இங்கு நல்லது நடக்கும். நடத்தியே காட்டுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைதொடர்ந்து மவுலிவாக்கம், கோலப்பாக்கம், கிருகம்பாக்கம், மணப்பாக்கம், பட்ரோடு, வேளச்சேரி பிருந்தாவன் நகர், கக்கன் பாலம், கிண்டி ரேஸ்கோர்ஸ், சைதாப்பேட்டை ஆர்ச், சைதாப்பேட்டை மார்க்கெட், நந்தனம் சிக்னல், மயிலாப்பூர் சாய் பாபா கோவில், லஸ் கார்னர் உள்பட பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு திரட்டினார். நிறைவாக மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

Next Story