தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக தனி வாக்குச்சாவடிகள் அமைக்கக்கோரிய வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும்


தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக தனி வாக்குச்சாவடிகள் அமைக்கக்கோரிய வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 March 2021 3:06 AM GMT (Updated: 4 March 2021 3:06 AM GMT)

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுப்போடும் வகையில் தனி வாக்குச்சாவடிகள் அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தபால் ஓட்டு போடுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. தபால் ஓட்டுகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தேர்தல் பணி தொடர்பான கடைசிக்கட்ட பயிற்சியின்போது வழங்கப்படுகின்றன. அந்த ஓட்டுச் சீட்டில் அதிகாரிகளின் அத்தாட்சி கையெழுத்தை பெறவேண்டும். இவ்வாறு ஓட்டுப்போட்டு அனுப்பும் தபால் ஓட்டுகள், சில வேளைகளில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்றடைகிறது.

அதிக வாக்குச்சாவடிகள்

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் பணியில் ஈடுபட்ட 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 ஊழியர்களில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 697 பேர் மட்டுமே தபால் மூலம் ஓட்டு போட்டனர். மீதமுள்ளவர்கள் தபால் ஓட்டு போடவில்லை. அவ்வாறு போடப்பட்ட தபால் ஓட்டுகளில், அதிகாரிகளின் அத்தாட்சியை பெறவில்லை என்ற காரணத்தினால், சுமார் 62 ஆயிரம் தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டு, வீணாகிவிட்டது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இங்கு சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 100 சதவீத ஓட்டுகள் பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனி வாக்குச்சாவடிகள்

எனவே, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்களை வெளியிடவும், தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பாக தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் ஓட்டுப்போடவும், இதற்காக சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தனி வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

Next Story