தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும் கே.எஸ். அழகிரி பேட்டி


தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும் கே.எஸ். அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 4 March 2021 9:48 AM IST (Updated: 4 March 2021 9:48 AM IST)
t-max-icont-min-icon

தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும் என்று கடலூரில் கே.எஸ். அழகிரி கூறினார்.

கடலூர், 

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே கூட்டணி

சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க.விடம் 2 முறை பேசியிருக்கிறோம். பொதுவாக கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் இருக்கும். அதன் பிறகு அது மறைந்து விடும். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க. கடந்த 15 ஆண்டு காலமாக ஒரே கூட்டணியில் இருக்கிறோம்.

நான் பல நேரங்களில் சொல்லி வருவது போல இந்த கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் அமைந்து இருப்பது தான், இந்த கூட்டணிக்கு உள்ள வித்தியாசம்.

ஆகவே இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வரவேண்டும். இந்தியாவினுடைய ஜனநாயகத்தை வேரறுக்கக்கூடிய மோடி அரசாங்கமும், எடப்பாடி அரசாங்கமும் தோல்வியைத் தழுவ வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியான சிந்தனையோடு இருக்கிறது.

தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும்

தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க. தான் முடிவு செய்யவேண்டும். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் போட்டியிடும். ராகுல்காந்தி பிரசாரம் செய்தவுடன் காங்கிரஸ் எழுச்சியுடன் உள்ளது. தமிழ்நாட்டிலேயே ஒரு பைசா கூட செலவு செய்யாமல் கூட்டம் கூடுவது யாருக்கு என்றால், அது ராகுல்காந்திக்கு மட்டும் தான்.

வாக்கு எண்ணிக்கைக்கு நீண்ட நாட்கள் இருப்பதால் பிரச்சினை எதுவும் நடக்காது. நீண்ட இடைவெளி இருப்பதால் வாக்குகளை மாற்றி விடுவார்கள் என்ற எண்ணம் இருக்கும். மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் நம்முடைய சிஸ்டத்தில் முடியாது. ஜனநாயகத்தை நம்புகிறேன். தவறு நடக்காது.

தேர்தலில் பணம் கொடுப்பது ஓரளவிற்கு பலனளிக்கும். ஆனால் பணம் என்பது வெற்றியைத் தராது. முழுக்க முழுக்க பணம் மட்டுமே வெற்றியை தீர்மானிக்காது.

காமராஜர் ஆட்சி

தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் தற்போது தேர்தலை சந்திக்க உள்ளது. காமராஜர் ஆட்சியை கொண்டு வருவது காங்கிரஸ் கட்சியின் நோக்கம். அதை 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கும் தேர்தல் என்று நாங்கள் சொல்லவில்லை.

அது எங்களுடைய நீண்டநாள் கனவு, லட்சியம். அதற்காக தான் செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

Next Story