சைக்கிள் சின்னத்தை மீட்க உதவும் என கோரிக்கை அ.தி.மு.க. கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்கும் த.மா.கா.


சைக்கிள் சின்னத்தை மீட்க உதவும் என கோரிக்கை அ.தி.மு.க. கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்கும் த.மா.கா.
x
தினத்தந்தி 4 March 2021 4:52 AM GMT (Updated: 4 March 2021 4:52 AM GMT)

சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில், அ.தி.மு.க. கூட்டணியில் 12 தொகுதிகளை த.மா.கா. கேட்டுள்ளது.

சென்னை, 

சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க., தே.மு.தி.க. உடனான தொகுதி பங்கீடு உறுதியாகாமல் இழுபறியே நீடிக்கிறது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் த.மா.கா.வுடன், அ.தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்காமலேயே இருந்து வந்தது.

சமீபத்தில் கூட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு அ.தி.மு.க.வின் கதவு திறக்கப்படும்போது காலடி எடுத்து வைக்கலாம் என்ற நிலைப்பாட்டிலேயே த.மா.கா. பொறுமையாக இருந்து வந்தது.

அமைச்சருடன் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைக்கு வருமாறு த.மா.கா.வுக்கு, அ.தி.மு.க.விடம் இருந்து நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து த.மா.கா.வின் துணைத்தலைவர்கள் என்.கோவைத்தங்கம், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் ஆகியோர் நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு வந்தனர்.

இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பேச்சுவார்த்தையின்போது அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என்ற அதிகாரபூர்வ கட்சியின் கடிதத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் அவர்கள் வழங்கினர்.

பேச்சுவார்த்தை நிறைவில் த.மா.கா. துணைத்தலைவர்கள் என்.கோவைத்தங்கம், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

12 இடங்கள் கேட்டுள்ளோம்

2001-ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான த.மா.கா கூட்டணி அமைத்து சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து நல்லுறவு பேணி வரும் கட்சியாக த.மா.கா. இருக்கிறது. எனவே இந்தமுறை எங்களது சைக்கிள் சின்னத்தை மீட்பதற்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கு இன்னும் பலம் சேர்க்கும் வகையிலும் 12 இடங்களை த.மா.கா. சார்பில் கேட்டிருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களின் நல்ல முடிவை தெரிவிப்பதாக அமைச்சர் நம்பிக்கை அளித்திருக்கிறார். பேச்சுவார்த்தை நல்லபடியாகவே நடந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story