காந்திய மக்கள் இயக்கம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறது தமிழருவி மணியன் அறிவிப்பு


காந்திய மக்கள் இயக்கம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறது தமிழருவி மணியன் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 March 2021 6:52 AM IST (Updated: 5 March 2021 6:52 AM IST)
t-max-icont-min-icon

காந்திய மக்கள் இயக்கம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறது தமிழருவி மணியன் அறிவிப்பு.

சென்னை, 

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை முற்றாக விடுவிக்க வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் ஒற்றை நோக்கமாகும். கடந்த 12 ஆண்டுகளாக மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற இரண்டு இலட்சிய பதாகைகளை சுமந்தபடி காந்திய மக்கள் இயக்கம் தன் பயணத்தை தொடருகிறது. உண்மை, நேர்மை, ஒழுக்கம், சமூக நலன் சார்ந்த சிந்தனை, தன்னல மறுப்பு ஆகியவையே மேலான அரசியல்வாதிகளின் பண்பு நலன்கள் ஆகும்.

இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலின் மூலம் எந்த அதிசயமும் அரங்கேறப் போவதில்லை. ஆட்சி நாற்காலியில் அமரும் மனிதர்கள் ஒருவேளை மாறக்கூடும். ஆனால் நெறி சார்ந்த நல்லரசியல் வாய்ப்பதற்கு வழியில்லை.

எப்படியாவது ஒரு சந்தர்ப்பவாத அணியில் இடம் பெற்று இரண்டு மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தித் தன் இருப்பை வெளிப்படுத்தும் அருவருப்பான அரசியலில் ஈடுபட காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை. களத்தில் நிற்கும் எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story