தமிழகத்தில் பிரசாரம் செய்ய ராகுல்காந்திக்கு தடை விதிக்க வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரியிடம், பா.ஜ.க. புகார் மனு


தமிழகத்தில் பிரசாரம் செய்ய ராகுல்காந்திக்கு தடை விதிக்க வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரியிடம், பா.ஜ.க. புகார் மனு
x
தினத்தந்தி 5 March 2021 8:40 AM IST (Updated: 5 March 2021 8:40 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதால் வரும் நாட்களில் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ஜ.வி.னர் புகார் அளித்தனர்.

சென்னை, 

தமிழக பா.ஜ.க. தேர்தல் தொடர்பு குழு பொறுப்பாளரும், முன்னாள் டி.ஜி.பி.யுமான வி.பாலசந்திரன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கட்சி நிர்வாகிகளுடன், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை நேற்று சந்தித்து மாநில தலைவர் எல்.முருகன் சார்பில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

ராகுல் பிரசாரத்திற்கு தடை?

இதுகுறித்து வி.பாலசந்திரன் மற்றும் கே.டி.ராகவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 1-ந்தேதி மாணவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார். பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துவிட்டால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில் அரசியல் கட்சி தலைவர்கள் பேச அனுமதி அளித்து இருக்க கூடாது. அதுவும் குறிப்பாக மாணவர்களை தூண்டும் விதமாக சுதந்திர யுத்தத்திற்கு தயாராக வேண்டும் என்று பேசி உள்ளார்.

குறிப்பாக தேர்தல் நேரத்தில் மாணவர்கள் மத்தியில் தேர்தல் பிரசாரத்தில் இவ்வாறு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய செயலாகும். அத்துடன் சட்டத்தையும் மீறிய செயலாகும். எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் ராகுல் காந்தி வரும் நாட்களில் பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் காவல் துறையிடமும் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story