அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 5 March 2021 4:36 AM GMT (Updated: 5 March 2021 4:36 AM GMT)

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி வேட்பாளர்கள் விருப்பமனு வினியோகம் தொடங்கி, நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் 8 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கட்சியினரிடம் இருந்து பெறப்பட்டன.

இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சி 4-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. 

இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், செய்தி தொடர்பாளர் பா.வளர்மதி, மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் உள்பட நிர்வாகிகள் அடங்கிய ஆட்சி மன்ற குழு, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் நடத்தியது.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நேர்காணல் இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஆட்சி மன்றக்குழு நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

வேட்பாளர் நேர்காணல் நிகழ்வு முடிந்தநிலையில், விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவுபெற்ற உடனேயே அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனால் அதிமுகவினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.  வெற்றி வியூகம் குறித்து மாவட்ட  செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்துகிறது. நிர்வாகிகளை  ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியாக சந்தித்து பேசி வருகின்றனர்.

Next Story