கடலூா் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்


கடலூா் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்
x
தினத்தந்தி 5 March 2021 1:58 PM GMT (Updated: 6 March 2021 4:51 AM GMT)

கடலூா் தொகுதி கண்ணோட்டம்

வங்க கடற்கரையோரம் அமைந்துள்ளது கடலூர். ஒவ்வொரு ஆண்டும் புயல், மழை வெள்ளம், வறட்சி என்று இயற்கை பேரிடர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் ஒரு பகுதி. முன்னொரு காலத்தில் கப்பல் போக்குவரத்தால் வணிகத்தில் கொடிகட்டி பறந்த ஊர். 
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் அமைச்சர் தொகுதி என்ற வி.ஐ.பி.அந்தஸ்தை பெற்றது கடலூர் தொகுதி.
இந்த தொகுதியில் கடலூர் நகராட்சி பகுதிகள், துறைமுகம், மேலக்குப்பம், நல்லாத்தூர், தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம், செல்லஞ்சேரி, புதுக்கடை, வடபுரம், கீழ்பாதி, கரைமேடு, திருப்பணாம்பாக்கம், அழகியநத்தம், வெள்ளப்பாக்கம், மருதாடு, இரண்டாயிரம் விளாகம், சுப உப்பலவாடி, குண்டு உப்பலவாடி, கோண்டூர், தோட்டப்பட்டு, வரக்கால்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது.
இந்த தொகுதியில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர். மீனவர்கள், முஸ்லிம்கள், ரெட்டியார், செட்டியார், நாயுடு, முதலியார், பிள்ளைமார், நாடார் உள்ளிட்ட சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர்.
 இங்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எம்.சி.சம்பத் 70,922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தி 46,509 ஓட்டுகள் வாங்கினார்.
இதே தொகுதியில் கடந்த 1989, 1996, 2001-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இள.புகழேந்தி வெற்றி வாகை சூடினார். அதேபோல் தற்போது அமைச்சராக இருக்கும் எம்.சி.சம்பத் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலிலும் இள.புகழேந்தியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடலூர் நகரத்தை பொறுத்தவரை வியாபாரமும், கிராமப்புறங்களில் விவசாயமும் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நகர சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தீர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேறவில்லை. கடலூரில் புதிய தொழிற்சாலை அமைத்து, வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. கடலூர் சட்டமன்ற அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை, அதனால் தங்களின் குறைகளை சொல்ல முடியவில்லை என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் உள்ளது.
குண்டும், குழியுமான ஜவான்ஸ்பவன் சாலை ரூ.2 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது ஆறுதலை அளித்துள்ளது. புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்த நிலையில், அதுவும் சுற்றுச்சுவர் வேலி அமைக்கும் பணியோடு உள்ளது.
கடலூர்- புதுச்சேரி புதிய ரெயில் பாதை, அரசு மருத்துவக்கல்லூரி அமைக்காமை, கம்மியம்பேட்டை ரெயில்வே மேம்பாலம் திட்டம், துறைமுக விரிவாக்கம், குடிநீர் பிரச்சினை, கொசுத்தொல்லை, பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படாமை என மாவட்ட தலைநகருக்கான எவ்வித பணிகளும், திட்டங்களும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடலூர் அருகே சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளால் கடலூர் நகரம் தொடர்ந்து மாசுபடுவதை தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டும் நீடித்து வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, 2 லட்சத்து 28 ஆயிரத்து 541 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது புதிய வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 9 ஆயிரத்து 823 வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். இவர்களும், நடுநிலையாளர்களும் தான் இந்த தொகுதி வெற்றியை தீர்மானிப்பார்கள்.


கடலூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களின் முடிவுகள் விவரம் வருமாறு:-
1952- டி.டி.பி. கட்சி வெற்றி
 (இரட்டை உறுப்பினர்கள்) 
சிவசிதம்பர ராமசாமி படையாச்சி (டி.டி.பி)
ரத்தினம் (டி.டி.பி)
பி.ஆர்.சீனிவாச படையாச்சி (காங்கிரஸ்)
கணேசன் (காங்கிரஸ்)
1957- காங்கிரஸ் வெற்றி
பி.ஆர்.சீனிவாசபடையாச்சி (காங்கிரஸ்)
சம்பந்தம் (சுயே)
1962-காங்கிரஸ் வெற்றி
பி.ஆர்.சீனிவாச படையாச்சி (காங்கிரஸ்)
ஆர்.சாம்பசிவரெட்டியார் (தி.மு.க.)
1967-தி.மு.க. வெற்றி
இளம்வழுதி (தி.மு.க.)
பி.ஆர்.சீனிவாச படையாச்சி (காங்கிரஸ்)
1971-தி.மு.க. வெற்றி
பாபு கோவிந்தராஜன் (தி.மு.க.)
பி.ஆர்.சீனிவாச படையாச்சி (காங்கிரஸ்)
1977-அ.தி.மு.க. வெற்றி
அப்துல்லத்தீப் என்ற ஹிலால் (அ.தி.மு.க.) -24,107
பாபுகோவிந்தராஜன் (தி.மு.க.) -22,280
1980-தி.மு.க. வெற்றி
பாபு கோவிந்தராஜன் (தி.மு.க.) -40,539
ரகுபதி (அ.தி.மு.க.) -37,398
1984-காங்கிரஸ் வெற்றி
வி.ஜி.செல்லப்பா (காங்கிரஸ்) -53,759
கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.) -37,063
1989-தி.மு.க. வெற்றி
இள.புகழேந்தி (தி.மு.க.) -42,790
ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்) -22,408
1991-காங்கிரஸ் வெற்றி
பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் (காங்கிரஸ்) -51,459
இள.புகழேந்தி (தி.மு.க.) -36,287
1996-தி.மு.க. வெற்றி
இள.புகழேந்தி (தி.மு.க.) -74,480
ராஜேந்திரன் (காங்கிரஸ்) -25,853
2001-தி.மு.க. வெற்றி
இள.புகழேந்தி (தி.மு.க.) -54,671
பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் (காங்கிரஸ்) -54,637
2006-தி.மு.க. வெற்றி
கோ.அய்யப்பன் (தி.மு.க.) -67,003
சேவல் ஜி.ஜே.குமார் (அ.தி.மு.க.) -60,737
2011-அ.தி.மு.க. வெற்றி
எம்.சி.சம்பத் (அ.தி.மு.க.) -85,953
இள.புகழேந்தி (தி.மு.க.) -52,275
2016-அ.தி.மு.க. வெற்றி
எம்.சி.சம்பத் (அ.தி.மு.க.) - 70, 992
இள.புகழேந்தி (தி.மு.க.) -46,509பயோ டேட்டா
மொத்த வாக்காளர்கள் -2,38,364
ஆண்கள் -------------------------1,14,616
பெண்கள் ----------------------1, 23,701
மூன்றாம் பாலினம் -----47

Next Story