தொகுதி கண்ணோட்டம்: ஆர்.கே.நகர்


தொகுதி கண்ணோட்டம்: ஆர்.கே.நகர்
x
தினத்தந்தி 6 March 2021 1:48 AM GMT (Updated: 6 March 2021 1:48 AM GMT)

வி.ஐ.பி. தொகுதிகளுள் ஒன்றான ஆர்.கே.நகர் தொகுதி கண்ணோட்டம் பார்க்கலாம்

மிழகத்தில் 58 ஆண்டுகளாக வழக்கமான தொகுதிகளுள் ஒன்றாக இருந்த ஆர்.கே.நகர் (ராதாகிருஷ்ணன் நகர்), கடந்த 2015-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிட்ட பிறகு, வி.ஐ.பி. தொகுதிகள் பட்டியலில் இடம்பிடித்தது.

இந்தத் தொகுதியில், 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனந்தநாயகி தொடர் வெற்றி பெற்றார். பின்னர், 1967 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.கண்ணன் இரட்டை வெற்றியை பதிவு செய்தார். 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் களம் இறங்கிய ஐசரிவேலன் வாகை சூடினார். 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், முறையே காங்கிரஸ் வேட்பாளர்கள் வி.ராஜசேகரன், எஸ்.வேணுகோபால் வெற்றி பெற்றனர்.

1989-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சற்குணமும், 1991-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனனும், 1996-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சற்குணமும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து, 2001, 2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. சார்பில் களம் இறங்கிய பி.கே.சேகர்பாபு தொடர் வெற்றி பெற்றார். ஆனால், 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, பி.கே.சேகர்பாபு எதிரணியான தி.மு.க.வுக்குச் சென்று அக்கட்சி சார்பில் வேட்பாளராக களம் கண்டார். ஆனால், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.வெற்றிவேல் வெற்றி பெற்றார்.

2015-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை பி.வெற்றிவேல் ராஜினாமா செய்ததால், ஜூன் மாதம் 27-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிட்டார். தி.மு.க. தேர்தலை புறக்கணித்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சி.மகேந்திரன் களம் கண்டார். இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயலலிதா 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றார்.

2015-ம் ஆண்டு இடைத்தேர்தல்

ஜெயலலிதா (அ.தி.மு.க.) 1,60,432

சி.மகேந்திரன் (இ.கம்யூ) 9,710

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் ஜெயலலிதா போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் சிம்லா முத்துசோழன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலில், 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்குகள் 2,54,498

பதிவான வாக்குகள் 1,74,076

ஜெயலலிதா (அ.தி.மு.க.) 97,218

சிம்லா முத்துசோழன் (தி.மு.க.) 57,673

இந்தத் தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர போட்டியிட்ட ஏனைய 43 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். ஆனால், ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த நிலையில், அந்தத் தொகுதி 7 மாதங்களிலேயே காலியானதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. டெபாசிட்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டது. தி.மு.க. டெபாசிட்டையும் இழந்தது.

2017-ம் ஆண்டு இடைத்தேர்தல்

டி.டி.வி.தினகரன் (சுயேச்சை) 89,013

இ.மதுசூதனன் (அ.தி.மு.க.) 48,306

மருதுகணேஷ் (தி.மு.க.) 24,581

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தொகுதி மறுசீரமைப்பின் கீழ், ராயபுரம் தொகுதியில் இருந்த 14-வது வட்டம் ஆர்.கே.நகர் தொகுதியில் சேர்க்கப்பட்டது. அதேபோல், ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்த சில பகுதிகள் ராயபுரம் தொகுதிக்கு மாற்றப்பட்டன.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 14-வது வட்டத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் காசிமேடு பகுதி வருகிறது. இந்தத் தொகுதியில் நாடார் சமுதாயத்தினர் 30 சதவீதம் வரை இருக்கின்றனர். அடுத்தபடியாக வன்னியர்கள் 25 சதவீதமும், முஸ்லிம்கள் 15 சதவீதமும் உள்ளனர். பிற சமுதாயத்தினரும் பரவலாக இருப்பதுடன், தெலுங்கு மொழி பேசும் ஆதி ஆந்திரர்களும் கணிசமாக இருக்கிறார்கள்.

பெரிய தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ இல்லாத இந்தத் தொகுதியில் வியாபாரம் மட்டுமே பிரதான தொழிலாக இருக்கிறது. பல பகுதிகளில் சாலைகள் குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய், கழிவுநீர் கலப்பது முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.

ஜெயலலிதா இந்தத் தொகுதியில் 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, அதாவது, 17 மாதங்கள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். அந்தக் குறுகிய காலத்தில்தான் நிறைய திட்டங்கள் இந்தக் தொகுதிக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால் அதன்பிறகு கேட்பாரற்ற நிலையிலேயே இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, வரும் தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது, புதிய வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள் என 7,540 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

Next Story