கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு இறுதியானது ...? தேர்தல் பணிகளை தொடங்க அதிமுக தீவிரம்..!


கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு இறுதியானது ...? தேர்தல் பணிகளை தொடங்க அதிமுக தீவிரம்..!
x
தினத்தந்தி 6 March 2021 7:52 AM IST (Updated: 6 March 2021 7:52 AM IST)
t-max-icont-min-icon

அதிமுகவில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு ஒருவகையில் இறுதியாகி உள்ளது. முதல் தேர்தல் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. அடுத்து தேர்தல் பணிகளை தொடங்க தீவிரம் காட்டப்படுகிறது.

சென்னை

அதிமுக கூட்டணியில் இரு நாட்களுக்குள் தொகுதி பங்கீடு முடிவுக்கு வருமென பா.ஜ.கவும், தேமுதிகவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தொகுதி பங்கீட்டை முடித்து,தேர்தல் பணிகளை தொடங்க அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க., தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்னும் 2 நாட்களில் எத்தனை தொகுதிகள் என்ற முடிவு தெரியவரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தெரிவித்தார். 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கூடுதல் தொகுதிகள் கேட்பதால், இந்த கூட்டணி உறுதி செய்வதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இதனிடையே சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, தாங்கள் 23 இடங்கள் கேட்டுள்ள நிலையில், அதிமுக தரப்பில் 15 இடங்களும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தர முன்வந்துள்ளதாக கூறினார். கூட்டணியில் மற்ற பெரிய கட்சிகளும் இருப்பதால், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை தர முடியாது என அதிமுக தெரிவித்துள்ளது.  அதிமுகவைத் தவிர வேறு யாருடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை 2 நாட்களில் சுமுகமாக முடியும்  என கூறினார்.

சுமார் 20 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தேமுதிக அதிமுகவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடனான தொகுதி பங்கீடு நிறைவடைந்த பின்னரே தேமுதிகவுடன் உடன்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக சார்பில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர். இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வால்பாறை, ஈரோடு மேற்கு, பட்டுக்கோட்டை, திருப்பரங்குன்றம், காங்கேயம், திருப்பூர் தெற்கு, பண்ருட்டி ஆகிய 8 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி, அதில் 3 தொகுதிகளை தமாகா கோருவதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் 6 பேர் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. 

சமூகம் சார்ந்த வகையில், எடப்பாடி- கொங்கு வெள்ளாள கவுண்டர், போடிநாயக்கனூர்- முக்குலத்தோர், ராயபுரம்- மீனவர், விழுப்புரம்- வன்னியர், ஸ்ரீ வைகுண்டம்- நாடார், நிலக்கோட்டை (தனி) - ஆதிதிராவிடர் என்ற அடிப்படையில், அனைவருக்கும் அதிமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற வகையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும், விரைவில் சிறுபான்மையினரை உள்ளடக்கிய அடுத்த பட்டியல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Next Story