அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நடிகர் கருணாஸ் விலகல்; எதிர்ப்பு பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிப்பு
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாஸ் அறிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.
விலகல்
கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி தற்போது கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சி தலைவரான நடிகர் கருணாஸ் கூறியதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுடைய முக்குலத்தோர் புலிப்படை கட்சியை அங்கீகரித்து ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியை ஒதுக்கினார்கள்.
நம்ப வைத்து...
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் 12 அம்ச கோரிக்கைகளை கடந்த 4 ஆண்டுகளில் 19 முறை சட்டமன்றத்தில் நான் பேசி இருக்கிறேன்.எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேசிய தெய்வீக யாத்திரை நடத்தி இருக்கிறேன். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூவத்தூரில் நம்பிக்கை கொடுத்தார்கள். ஆனால் கடைசி நிமிடம் வரை எங்களை நம்ப வைத்து, கழுத்தை அறுத்து அரசியல் அனாதையாக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. சதி செய்திருக்கிறது.
அரசியல் ஆதாயத்துக்காக
அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த மாயத்தேவரை நிறுத்தினார். அ.தி.மு.க. கட்சி நிதியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா தங்க கவசம் அமைத்து தந்திருக்கிறார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அனைத்து சமுதாயத்தினரையும் சரிசமமாக நடத்தினார்கள். ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஒரு சில சமுதாயத்தை மட்டும் கையில் எடுத்து இருக்கிறார். 358 சமுதாய மக்கள் இருக்கிறபோது அரசியல் உள்நோக்கத்துக்காக, ஆதாயத்துக்காக ஒரு சில சமுதாயத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.எனவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுகிறது.
எதிர்ப்பு பிரசாரம்
அ.தி.மு.க. அமைச்சரவையில் 8 பேர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களும் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, குரலும் கொடுக்கவில்லை. எனவே அந்த அமைச்சர்களுக்கு எதிராகவும், அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும் பிரசாரம் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், ‘நீங்கள் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு, ‘நான் தி.மு.க.வுடன் பேசவில்லை’ என்று கூறினார்.
Related Tags :
Next Story