கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு


கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு
x
தினத்தந்தி 7 March 2021 11:25 AM IST (Updated: 7 March 2021 11:25 AM IST)
t-max-icont-min-icon

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக செயல்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக ஆகிய கட்சிக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

ஆனால், திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. அந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் யார் என்ற தகவல் விரைவில் வெளியாக உள்ளது. முன்னதாக, கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-விற்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story