சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்: மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி


சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்: மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
x
தினத்தந்தி 7 March 2021 4:32 PM IST (Updated: 7 March 2021 4:35 PM IST)
t-max-icont-min-icon

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. எஞ்சிய 3 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளார். தேர்தலில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதையடுத்து, தனது பிரசார நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். 



 


இந்நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிலிஹூரி நகரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதுடன், பதாகைகளுடன் ஏராளமான பெண்கள் கண்டனப் பேரணியில் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி, “ சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் மாற்றம் நிகழப்போவது, மேற்கு வங்காளத்தில் அல்ல. மத்தியில் தான். மேற்கு வங்காளத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். முதலில் உ.பி., பீகார் மற்றும் பிற மாநிலங்களில் என்ன நிலை என்று பிரதமர் மோடி பார்க்க வேண்டும். மேற்கு வங்காளத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

Next Story