தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவும் கராத்தே தியாகராஜன் பேட்டி


தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவும் கராத்தே தியாகராஜன் பேட்டி
x
தினத்தந்தி 8 March 2021 3:38 AM IST (Updated: 8 March 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 இடங்களிலும் அக்கட்சி தோல்வியை தழுவும் என்று கராத்தே தியாகராஜன் கூறினார்.

சென்னை, 

பா.ஜ.க.வில் சமீபத்தில் இணைந்த கராத்தே தியாகராஜன், சென்னை கோயம்பேட்டில் உள்ள பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (நேற்று) வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தை தொடங்கிவைத்தார். இதன் மூலம் பா.ஜ.க.வுக்கு வெற்றி உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்.

காங்கிரஸ் தோல்வியை தழுவும்

ஆர்.எஸ்.எஸ். ஒரு சமுதாய இயக்கம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். ஆனால் தற்போது தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி தவறாக பேசி உள்ளார்.

தி.மு.க. தங்களை அவமதித்துவிட்டது, மதிக்கவில்லை என்று எல்லாம் கூறி சத்தியமூர்த்திபவனில் அழகிரி நாடகம் போட்டார். தற்போது தி.மு.க.விடம் மன்றாடி 25 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. அந்த இடங்களை விற்பனை செய்கின்றனர். இதனால் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவும்.

மீண்டும் எடப்பாடி பழனிசாமி

தமிழக துணை முதல்-அமைச்சராகவும், மேயராகவும் இருந்தபோது எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் இருந்த ஸ்டாலின், தற்போது 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வெளியிடப்போவதாக கூறுகிறார். அவர் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் சாதாரண ஒரு தொண்டரே அவரைத் தோற்கடிப்பார்.

ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

நடிகர் ரஜினிகாந்தின் குரல்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஆதரித்துவரும் தேசியவாதியான நடிகர் ரஜினிகாந்த், நாட்டு நலன் கருதி அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக குரல் கொடுப்பார்.

தொடர்ந்து ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய மந்திரிகளும், தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்ற பா.ஜ.க. தயார்நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜா, மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

Next Story