கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் மும்முரம்: அ.தி.மு.க. 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு


கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் மும்முரம்: அ.தி.மு.க. 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு
x
தினத்தந்தி 7 March 2021 11:08 PM GMT (Updated: 7 March 2021 11:08 PM GMT)

அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதிசெய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியாக வாய்ப்புள்ளது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பா.ம.க.வுக்கு 23 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டன. தே.மு.தி.க., த.மா.கா. உள்பட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் முடிந்தநிலையில் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 5-ந் தேதி வெளியானது. அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), டி.ஜெயக்குமார் (ராயபுரம்), சி.வி.சண்முகம் (விழுப்புரம்), எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை-தனி) ஆகிய 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

தே.மு.தி.க.வுடன் தொடரும் இழுபறி

அ.தி.மு.க.வை பொறுத்தவரை தே.மு.தி.க.வுக்கு இன்னும் பச்சைக்கொடி காட்டப்படாமலே இருக்கிறது. ‘கூட்டணிக்காக அ.தி.மு.க.தான் நம்மைக் கெஞ்சுகிறது, நாம் இல்லை என்றால் அ.தி.மு.க. இல்லை' என்பன போன்ற எல்.கே.சுதீசின் ஆக்ரோஷமான பேச்சுகள் ஒருபுறம், ‘தனித்துப் போட்டியிடவும் தயார்' என்று பிரேமலதாவின் பேச்சுகள் மறுபுறம் என தே.மு.தி.க.வின் செயல்பாடுகள் அ.தி.மு.க.வுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்று கூறப்படுகிறது.

அதேநேரம் தே.மு.தி.க.வை கைவிடவும் அ.தி.மு.க. விரும்பவில்லை. தே.மு.தி.க. 25 இடங்கள் வரை கேட்டாலும், 15 இடங்கள் மட்டுமே தர அ.தி.மு.க. விரும்புவதாகவும், அதனாலேயே பேச்சுவார்த்தை இழுபறியாகி உள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. அதேவேளையில், த.மா.கா.வுடன் நடக்கும் பேச்சுவார்த்தை சுமுக உடன்பாட்டை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில், தேர்தல் அறிக்கை தயார் செய்வது உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்பான 3-ம் கட்ட ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், செய்தித்தொடர்பாளர் பா.வளர்மதி உள்ளடங்கிய ஆட்சி மன்றக் குழுவினர் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரும் பங்கேற்றனர்.

அதில் ஓரிரு நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அதுகுறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தொகுதியில் வெற்றிவாய்ப்புள்ளவர்கள் என மாவட்ட செயலாளர்களால் வழங்கப்பட்ட வேட்பாளர்கள் விவர அறிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

2-ம் கட்ட பட்டியல்

இதன்மூலம், 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. இன்று வெளியிட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் இன்று இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளநிலையில், யாருக்கும் பாதகமின்றி இந்த வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இது அ.தி.மு.க.வினரிடையே ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story