தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு


தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 March 2021 5:35 AM IST (Updated: 8 March 2021 5:35 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளோடு தொகுதி பங்கீடுகளை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு பேசி தொகுதிகளை இறுதி செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க.வுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ்

தி.மு.க. கூட்டணியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. கடந்த முறை ஒதுக்கியது போல இந்த முறையும் தங்களுக்கு 41 இடங்களை ஒதுக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடையே அதிகாரபூர்வமாக 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தி.மு.க-காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு முடிவுக்கு வந்தது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றனர். காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை இறுதி செய்தனர்.

ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்பட நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று காலை 9.45 மணிக்கு வந்தனர். அவர்களை கனிமொழி எம்.பி., சேகர் பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டசபை இடங்களும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை மு.க.ஸ்டாலின்-தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பரிமாறிக்கொண்டனர். அப்போது கனிமொழி எம்.பி., சேகர் பாபு எம்.எல்.ஏ., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின், சேகர் பாபு எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் திருச்சி மாநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

எழுச்சி, மகிழ்ச்சி

தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட்டு வெளியே வந்த கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி தி.மு.க.வோடு தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியையும், மகிழ்ச்சியையும் எங்களுக்கு அளித்துள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க. ஆதிக்கத்தை நிலைநாட்டி விடக்கூடாது. அவர்களுக்கு ஏவல் புரியக்கூடிய அ.தி.மு.க.வுக்கு ஒரு வாய்ப்பை அளித்துவிடக்கூடாது. சமூக நீதிக்கு எதிராக இருக்கும் இந்த சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்த தேர்தல் என்பது ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. இவைகளுக்கும் மேலாக ஒரு கொள்கையை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த தேர்தல் என்று கருதி, தமிழக காங்கிரஸ் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளது.

எல்லோரும் சேர்ந்து தேரை இழுப்பது தான் பொது நியதி. அதன் அடிப்படையில் இந்த மதசார்பற்ற கூட்டணி என்கிற மாபெரும் தேரை எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைவரும் சேர்ந்து இழுத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக கையெழுத்திட்டுள்ளோம். எங்கள் கூட்டணி கட்சிகள் நிற்கின்ற அனைத்து தொகுதிகளிலும் கடுமையாக பணியாற்றவேண்டும். கண் உறங்காமல் மிக கடுமையாக உழைத்து வெற்றியை ஈட்டுவோம்.

ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம்

25 தொகுதிகள் எவை? எவை? என்பது குறித்த பட்டியல் 2 நாட்களில் வழங்கப்படும். தி.மு.க.விடம் ராஜ்யசபா இடமும் கேட்டிருக்கிறோம். பா.ஜ.க.வை வீழ்த்திய பிறகு, காமராஜர் ஆட்சியை நாங்கள் கொண்டு வருவோம். தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு கேட்கும் நோக்கம் எங்களுக்கு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்றுடன் தொகுதி பங்கீடு இறுதிபெறுகிறது

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 இடங்களை ஒதுக்க தி.மு.க. தரப்பு முன்வந்துள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 8 இடங்களை கேட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளது. இதன்மூலம் இன்றுடன் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10-ந் தேதி தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட உள்ள தொகுதிகள் எவை? என்பதும் இன்னும் 2 நாட்களுக்குள் அடையாளம் காணப்பட உள்ளது.

Next Story