தொகுதி கண்ணோட்டம் செங்கல்பட்டு


தொகுதி கண்ணோட்டம் செங்கல்பட்டு
x
தினத்தந்தி 9 March 2021 3:11 AM IST (Updated: 9 March 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 29-11-2019 அன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவெடுத்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகள் உள்ளன.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 29-11-2019 அன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவெடுத்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தின் பெயரையே கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு தொகுதி விளங்குகிறது.

இந்த பகுதி பல்லவர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. பல்லவர் ஆட்சி காலத்தில் இந்த பகுதி கலை, கலாசார மற்றும் பொருளாதார நிலையில் உன்னத நிலையை எட்டி இருந்தது. 1565-ம் ஆண்டு் நடைபெற்ற தலைக்கோட்டைப்போரில் விஜயநகர மன்னர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் செங்கல்பட்டு நகரம் விஜயநகர மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது.

செங்கல்பட்டில் காணப்படும் கோட்டை விஜயநகர மன்னர்களால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையாகும். தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான நதிகளில் ஒன்றான பாலாறு இந்த தொகுதியில் பாய்கிறது.

இந்த தொகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம். இந்த தொகுதியில் உள்ள மறைமலைநகர் நகராட்சியில் தொழிற்பேட்டை, சிங்கப்பெருமாள் அருகே மகேந்திரா தொழிற்பூங்காவும் உள்ளன.

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பஸ் டெப்போவை அப்புறப்படுத்திவிட்டு சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பது செங்கல்பட்டு தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதுபோல செங்கல்பட்டில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்தும் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பினும் தற்போது வரை ஊராட்சியாக உள்ளது. இதனை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் பல்லவர் காலத்து குடவரை கோவிலான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. மலையே உடலாக உள்ள இந்த கோவில் பிரசித்தி பெற்றது. இது போல செட்டி புண்ணியம் ஊராட்சியில் கல்விக்கு அதிபதியான ஹயக்ரீஸ்வரர் கோவிலும் புகழ்பெற்றது. மாணவ-மாணவிகள் தேர்வு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து பேனா மற்றும் நோட்டு புத்தகங்களுடன் ஏலக்காய் மாலை சாற்றி வழிபட்டு செல்வார்கள். இந்த தொகுதியில் மிகப்பெரிய ஏரியான கொளவாய் ஏரி உள்ளது. அங்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு குழாம் அமைத்து வருவாய் பெற்று வந்தனர். ஆனால் அதை தொடங்கிய ஒரு ஆண்டிலேயே மூடிவிட்டனர். படகு குழாமை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோல செங்கல்பட்டு தொகுதியில் ரியல் எஸ்ட்டேட் தொழில் நடந்து வருகிறது. மறைமலை நகர் போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரித்து சிங்கப்பெருமாள் கோவிலில் தனி போலீஸ் நிலையம் அமைத்தால் குற்றங்கள் பெரிதும் தடுக்கப்படும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

கூடுவாஞ்சேரியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரவேண்டும். ஊரப்பாக்கம், திருத்தேரி, சத்யாநகர் பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது. செங்கல்பட்டு தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடர் உள்ளனர். செங்கல்பட்டில் பழமையான ரெயில் நிலையம், சட்டக்கல்லூரி, ஒருங்கிணைந்த கோர்ட்டுகள், மத்திய கலால் அலுவலகம், அரசு மருத்துவ கல்லூரி போன்றவை உள்ளன. புதுச்சேரிக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய அரசு ஆஸ்பத்திரி செங்கல்பட்டில் உள்ளது.

இந்த தொகுதியில் செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளன. செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் 1977, 1980, 1984-ம் ஆண்டுகளில் ஆனூர் ஜெகதீசன் (அ.தி.மு.க) வெற்றி பெற்றுள்ளனர். 1989-ம் ஆண்டு வி.தமிழ்மணி (தி.மு.க.), 1991-ம் ஆண்டு வரதராஜன் (அ.தி.மு.க.), 1996-ம் ஆண்டு தமிழ்மணி (தி.மு.க.) வெற்றி பெற்றுள்ளனர். 2001, 2006-ம் ஆண்டுகளில் திருக்கச்சூர் ஆறுமுகம் (பா.ம.க.) வெற்றி பெற்றுள்ளார். 2011-ம் ஆண்டு அனகை முருகேசன் (தே.மு.தி.க.) வெற்றி பெற்றார்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்காளர்கள் 3,66,345

பதிவான வாக்குகள் 2,49,792

வரலட்சுமி மதுசூதனன் (தி.மு.க.) 1,12,675

கமலக்கண்ணன் (அ.தி.மு.க.) 86,383

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது செங்கல்பட்டு தொகுதியில 3 லட்சத்து 66 ஆயிரத்து 345 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 4 லட்சத்து 26 ஆயிரத்து 535 வாக்காளர்கள் உள்ளனர்.

Related Tags :
Next Story