வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தபால் ஓட்டு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு


வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தபால் ஓட்டு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 March 2021 9:55 PM GMT (Updated: 8 March 2021 9:55 PM GMT)

வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தபால் ஓட்டு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை, 

வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் சட்டசபை தேர்தலில், தேர்தல் அதிகாரிகளை அழைத்துச் செல்வது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளில் வாடகை வாகன ஓட்டுனர்கள் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாமல், பால், குடிநீர், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை ஓட்டும் பணிகளையும் செய்கின்றனர். இதனால் அவர்கள் தேர்தலின்போது ஓட்டு அளிக்க முடிவதில்லை. எனவே, வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தபால் ஓட்டு சலுகை வழங்கக்கோரி கடந்த ஆண்டு அளித்த கோரிக்கை மனுவைப் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், அடுத்த மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வாடகை வாகன ஓட்டுனர்களை அடையாளம் கண்டு, தபால் வாக்களிக்க அனுமதிப்பது என்பது சாத்தியமில்லாதது என்று கருத்து கூறினர். பின்னர், வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்கம் கடந்த ஆண்டு அளித்த மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

Next Story