பா.ஜ.க. மிரட்டலால் காங்கிரசில் இருந்து வெளியேறுகின்றனர் நாராயணசாமி குற்றச்சாட்டு


பா.ஜ.க. மிரட்டலால் காங்கிரசில் இருந்து வெளியேறுகின்றனர் நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 March 2021 11:09 PM GMT (Updated: 8 March 2021 11:09 PM GMT)

பா.ஜ.க. மிரட்டலால் காங்கிரசில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுகின்றனர் என்று நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 2-வதுகட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

விரைவில் தொகுதி பங்கீடு

காங்கிரஸ்-தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக 2-வதுகட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக பேசினோம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர். எங்கள் கட்சியின் தலைமை தெரிவித்த கருத்துகளை நாங்கள் தெரிவித்தோம். 2 தரப்பினரும் தகவல்களை பரிமாறிக் கொண்டோம். அவர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கையை தெரிவித்தனர்.

எங்கள் கட்சியின் மேலிட பார்வையாளர் தினே‌‌ஷ் குண்டுராவ் சென்னை வருகிறார். அவர் தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். விரைவில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு விடும். தொகுதி பங்கீடு தொடர்பாக விரைவில் பிற கூட்டணி கட்சிகளுடனும் பேசுவோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

மிரட்டல், நிர்ப்பந்தம்

நீண்ட நாட்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் கட்சியை விட்டுப் போகிறார்களே? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே செல்பவர்கள் அதிருப்தியில் செல்லவில்லை. பா.ஜ.க.வின் மிரட்டலால் சிலர் செல்கிறார்கள். சிலர் நிர்ப்பந்தம் காரணமாக செல்கிறார்கள் என்றார்.

Next Story