டி.டி.வி.தினகரன் 2 தொகுதிகளில் போட்டி


டி.டி.வி.தினகரன் 2 தொகுதிகளில் போட்டி
x
தினத்தந்தி 8 March 2021 11:19 PM GMT (Updated: 8 March 2021 11:19 PM GMT)

சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட போகிறேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.ம.மு.க. வேட்பாளர் நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில நடந்த இந்த நேர்காணலில் விருப்ப மனு பெற்ற நிர்வாகிகள் மாவட்ட வாரியாக அழைத்து நேர்காணல் செய்யப்பட்டனர்.

முதல் நாளான நேற்று சென்னை, திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்பட 21 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மீதமுள்ள மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நேர்காணல் நடக்கிறது.

பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 தொகுதிகளில் போட்டி

சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என்று என்னை பற்றி கட்டுக்கதைகளையும், அவதூறு கருத்துகளையும் பரப்பி வருகிறார்கள். ஒரு தொகுதியில் அல்ல, 2 தொகுதிகளில் நான் போட்டியிட இருக்கிறேன். தீய சக்தியையும், துரோக சக்தியையும் எதிர்த்து உன்மையான தர்மயுத்தம் இனிதான் தொடங்க உள்ளது.

இதற்கு முன்பு தர்ம யுத்தம் என்ற பெயரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். பாண்டவர்களாகிய நாங்கள் துரியோதனர்கள் கூட்டத்தையும், தீய சக்திகளையும், அதர்மத்தையும் எதிர்க்கிறோம். மக்கள் எங்கள் பக்கம் இருப்பார்கள். இந்த தர்ம யுத்தத்துக்கு தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்.

எங்களது வேட்பாளர்களின் முதல் பட்டியலை நாளை (புதன்கிழமை) அறிவிப்பேன். கூட்டணி விரைவில் முடிவாகிவிடும். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை. அது முற்றிலும் தவறான தகவல். மற்ற கட்சிகள் பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story