"அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்"- தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி


அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்- தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி
x
தினத்தந்தி 9 March 2021 8:24 AM GMT (Updated: 9 March 2021 8:24 AM GMT)

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.

சென்னை,

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்களிடம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார். 

இது குறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியே வந்த தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் இன்றுதான் தீபாவளி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியை தழுவும். கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார். 

நாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் கூட்டணியில் இருந்து விலகல். தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்த முடிவு எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story