"நன்றி மறந்து தே.மு.தி.கவினர் பேசக் கூடாது" - அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ள நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்களிடம் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,
நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில்
இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் இன்றுதான் தீபாவளி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியை தழுவும். கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார். நாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் கூட்டணியில் இருந்து விலகல். தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்த முடிவு எடுத்துள்ளார்’ என்றார்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது குறித்து அதிமுக மூத்த தலைவரும், தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,
தேமுதிக-வுடன் கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம். தேமுதிக-வுக்கு அங்கிகாரம் கிடைக்கச்செய்தது அதிமுக தான். நன்றி மறந்து தேமுதிக-வினர் பேசக்கூடாது. கூட்டணியில் இருந்து விலகியதாக தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. பிடிக்கவில்லை என்பதற்காக அதிமுக மீது தேமுதிக சேற்றை வாரி இறைக்கக்கூடாது. பலத்திற்கு ஏற்ற மாதிரிதான் பாமக, பாஜவுக்கு அதிமுக தொகுதி ஒதுக்கியுள்ளது. தேமுதிக விலகியது எந்த விதத்திலும் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை. அது தேமுதிக-வுக்கு தான் பாதிப்பு.
என்றார்.
Related Tags :
Next Story