ஒரே நாளில் முடிவில் மாற்றம் தி.மு.க. கூட்டணிக்கு கருணாஸ் அளித்த ஆதரவு வாபஸ்


ஒரே நாளில் முடிவில் மாற்றம் தி.மு.க. கூட்டணிக்கு கருணாஸ் அளித்த ஆதரவு வாபஸ்
x
தினத்தந்தி 9 March 2021 10:13 PM GMT (Updated: 2021-03-10T03:43:21+05:30)

ஒரே நாளில் முடிவில் மாற்றம் தி.மு.க. கூட்டணிக்கு கருணாஸ் அளித்த ஆதரவு வாபஸ் டி.டி.வி.தினகரன் பக்கம் செல்ல முடிவா?.

சென்னை, 

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை இணைந்து, திருவாடணை தொகுதியில் போட்டியிட்டது. அந்த தொகுதியில் கருணாஸ் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்தநிலையில் அந்த கட்சியின் 12 அம்ச கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி, அக்கூட்டணியில் இருந்து கருணாஸ் கடந்த 6-ந்தேதி விலகினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ அ.தி.மு.க.வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன்‘ என்றார். இந்தநிலையில் தி.மு.க. கூட்டணிக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு அளித்தது. கருணாஸ் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் அஜய் வாண்டையார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றுமுன்தினம் கொடுத்து சென்றார்.

இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் தனக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கருணாஸ் நம்பி இருந்தார். ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து அவருக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. ஆதரவு கடிதத்துக்கு நன்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் கருணாஸ் விரக்தி அடைந்தார். இதையடுத்து அவர், தி.மு.க. கூட்டணிக்கு அளித்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்றார். அண்ணா அறிவாலயத்தில் அளிக்கப்பட்ட ஆதரவு கடித்ததை அஜய் வாண்டையாரே நேற்று திரும்ப பெற்று சென்றார். தற்போது கருணாஸ், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணிக்கு செல்லும் மனநிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story