அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 தொகுதிகள் அறிவிப்பு


அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 தொகுதிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 March 2021 3:28 PM GMT (Updated: 11 March 2021 3:28 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 தொகுதிகளின் பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

சென்னை, 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் அ.தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வருகிறது. இதுவரையில் பா.ம.க. வுக்கு 23, பா.ஜ.க. 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், குறைந்த தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது.

இதைத் தொடர்ந்து த.மா.கா.வுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 12 இடங்களை கேட்ட த.மா.கா.வுக்கு அ.தி.மு.க. 3 இடங்கள் ஒதுக்க முன்வந்தது. இதனால் இதை த.மா.கா. ஏற்கவில்லை. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தா.மா.க.வுக்கு 6 தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக தெரிவித்தது. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிகட்ட பேச்சுவார்த்தையில், அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்த பட்டியலை தா.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டார். அதன்படி பட்டுக்கோட்டை, திருவிக நகர், ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Next Story