தமிழக சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம் கொரோனாவையொட்டி கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது. கொரோனாவை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
இன்று வேட்பு மனுத்தாக்கல்
அத்துடன், காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்யும் நிலையில் உள்ளன. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் எந்த நேரத்திலும் வெளியிட தீவிரம் காட்டி வருகின்றன.
இந்தநிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் ஆகும். எனவே, 2 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது. தொடர்ந்து, 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 22-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
புதிய கட்டுப்பாடுகள்
வேட்பு மனுத்தாக்கலின்போது பின்பற்றுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி வருமாறு:-
வேட்புமனு விண்ணப்பங்களை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை கம்ப்யூட்டரிலேயே தட்டச்சு செய்து பூர்த்தி செய்து, அச்சு நகல் எடுத்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கலாம். ஆன்லைன் மூலமாக பிரமாண பத்திரத்தை, சொத்து, கடன் உள்ளிட்ட விவரங்களுடன் பூர்த்தி செய்து அளிக்கலாம். நோட்டரி மூலம் ஒப்புதல் பெற்று நேரடியாகவும் அளிக்கலாம். ஆன்லைன் மூலம் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது.
கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, டெபாசிட் தொகையை ஆன்லைன் மூலமாக அளிக்கும் வசதியை இந்த தேர்தலில் அறிமுகம் செய்திருக்கிறோம். நேரடியாகவும் அவர்கள் டெபாசிட் தொகையை அளிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான டெபாசிட் தொகை ரூ.5 ஆயிரமாகும், மற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம்.
வேட்பாளருடன் 2 பேருக்கு அனுமதி
வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 2 பேர் மட்டும் (முன்பு 5 பேர்) செல்லலாம். வேட்பு மனுத்தாக்கலுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் ஐந்தில் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் வாகனத்தில் வரக்கூடாது.
வேட்பு மனுத்தாக்கலின்போது ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் வந்துவிடக் கூடாது என்பதால், அவர்களுக்கு வெவ்வேறு நேரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார். காலை 11 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடியும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் வேட்புமனு பெறப்படாது.
தடுப்பூசி கட்டாயமல்ல
ஊர்வலங்கள் நடத்தினாலும், மாநில அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊர்வலம் செல்ல முடியாது. இந்த நெறிமுறைகளை மீறினால் அதில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஆனால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் மூலம் தண்டனை விதிக்கப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை. அதற்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயுள்ளவர்கள் என முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறை ஏற்பாடுகளை செய்யும். இந்த முன்னுரிமையை பயன்படுத்தி பலர் தடுப்பூசி போட்டுள்ளனர். தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா சோதனையும் கட்டாயமாக்கப்படவில்லை.
வாக்குச்சாவடிக்கு கூடுதல் உதவியாளர்கள்
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குப்பதிவு அன்று கூடுதலாக 3 உதவியாளர்களை நியமிக்க இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை கொடுத்து உதவுவதற்காக ஒருவர், மாவட்ட தேர்தல் அதிகாரியால் நியமிக்கப்படுவார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வாக்குச்சாவடிக்கு வெளியே 2 உதவியாளர்களை சுகாதாரத்துறை நியமிக்கும். உடல் வெப்பத்தை பார்ப்பது, சானிடைசர் கொடுப்பது போன்ற பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தலா ரூ.300 செலவில் சீருடை வழங்க இருக்கிறோம். அதன் நிறத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்வார்கள். வீடு வீடாகச் செல்லும்போது, வாக்குசாவடி அலுவலரை எளிதாக அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை இது.
தபால் ஓட்டு
தபால் ஓட்டு போடுவதற்கு மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் வற்புறுத்துவதாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் புகார் மனு அளித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு தபால் ஓட்டு என்பது ஒரு வாய்ப்பாகத்தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர கட்டாயமல்ல. நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து உதவிகளை பெற்று அவர்கள் வாக்களிக்கலாம்.
அவர்களுக்கு பொது வாகனத்தையும் (போக்குவரத்துக் கழக வாகனங்கள்) ஏற்படுத்தி தரலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது சாத்தியமில்லாததுதான். வாக்குச்சாவடி வாரியாக அவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, யார் யாருக்கு எப்படிப்பட்ட உதவி வேண்டும் என்ற தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அளிப்பார்கள். இதற்கான நடவடிக்கைகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் 3 லட்சம் மாற்றுத்திறனுடைய வாக்காளர்கள் உள்ளனர். 89 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதைக் கணக்கிடும்போது ஒரு வாக்குச்சாவடிக்கு 4 பேருக்கும் குறைவானவர்கள்தான் இருப்பார்கள். மேலும் உள்ளூர் சூழ்நிலைகளையும் கணக்கிட வேண்டும்.
தேர்தல் அறிவிப்புகள்
அரசியல் கட்சிகள் எதுவும் அறிவிப்புகளை வெளியிடும்போது, அது நிதி நிலைமைக்கு உட்படாது என்றோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அறிவிக்கப்படுகிறது என்றோ புகார் வந்தால் மட்டுமே அதில் தேர்தல் ஆணையம் தலையிடும். அரசியல் கட்சியாக அறிவிப்புகளை வெளியிடலாம். ஆனால் அரசு என்ற முறையில், புதிய திட்டங்களை அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டால்தான் அது தேர்தல் நடத்தை விதிகளுக்கு கீழ் வரும்.
ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு குறிப்பிட்ட தொகை நிதி வழங்கப்படும் என்ற அரசியல் கட்சிகளின் அறிவிப்பில் தேர்தல் ஆணையம் தனிச்சையாக தலையிடாது. அந்த அறிவிப்பு மூலம் பாதிக்கப்படுவதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதியை மீறியதாகவோ யாராவது முன்வந்து புகார் அளித்தால் அதில் தேர்தல் ஆணையம் தலையிடும். இதுபோன்ற அரசியல் கட்சிகளின் அறிவிப்பை எதிர்த்து இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வரவில்லை. தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடலாம். அதை தேர்தல் நடத்தை விதிகள் தடை செய்யவில்லை.
செலவீன பார்வையாளர் வருகை
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ராகுல்காந்தி மீது பா.ஜ.க. அளித்த புகாரின் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை பெறப்பட்டது. அது இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
234 தொகுதிகளுக்கும் சேர்த்து 118 தேர்தல் செலவீன பார்வையாளர்கள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு செலவீன பார்வையாளர் ஆகியோர் 12-ந்தேதி (இன்று) வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகின்றனர். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை பார்வையிடுவார்கள். அதுபோல போலீஸ் பார்வையாளர்கள் 40 பேர், பொதுப்பார்வையாளர்கள் 150 பேர் 19-ந்தேதி வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் சோதனையில் 10-ந்தேதிவரை ரூ.47.65 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பிடிபட்டுள்ளன. இவற்றில் பணம் மட்டும் ரூ.45.55 கோடி பிடிபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதால் இனி தேர்தல் பிரசாரமும், வாக்குசேகரிப்பும் களை கட்டும்.
Related Tags :
Next Story