2016 சட்டமன்ற தேர்தலில் நடந்தது என்ன? - ஒரு பார்வை

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை கொஞ்சம் திரும்பி பார்க்கலாமா?
சென்னை,
கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 அணிகள், 2 கட்சிகள் என எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவில் 6 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி நீங்கலாக அப்போது 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
அ.தி.மு.க. கூட்டணி
அ.தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி 227 தொகுதிகளிலும், கூட்டணியில் இடம்பெற்றிருந்த மனிதநேய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழ் மாநில முஸ்லிம் லீக், முக்குலத்தோர் புலிப்படை ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
இதில், அ.தி.மு.க. 131 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளான மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகியவை தலா ஒரு இடங்களிலும் என அக்கூட்டணி 134 இடங்களில் வெற்றி பெற்றது.
தி.மு.க. கூட்டணி
தி.மு.க. கூட்டணியில், தி.மு.க. 174 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 60 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதாவது, காங்கிரஸ் 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5, மனிதநேய மக்கள் கட்சி 4, புதிய தமிழகம் கட்சி 4, மக்கள் தே.மு.தி.க. (தே.மு.தி.க. அதிருப்தி) 3, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப் படை, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
இதில் தி.மு.க. 89 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் என மொத்தம் தி.மு.க. கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது.
மக்கள் நலக் கூட்டணி
இந்தத் தேர்தலில்தான் தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் 3-வது அணி உதயமானது. இதில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. 104, ம.தி.மு.க. 29, தமிழ் மாநில காங்கிரஸ் 26, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 25, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25, விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டன.
ஆனால், ஒரு தொகுதியில் கூட இந்த கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 155, அதன் கூட்டணி கட்சிகளான இந்திய ஜனநாயக கட்சி 45, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் 24, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி 2, கொங்குநாடு ஜனநாயக கட்சி 2, அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்து அருந்ததியர் சமூக கூட்டமைப்பு பேரியக்கம், கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் நலச்சங்கம், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், தமிழ்நாடு கோயர் முன்னேற்ற நலச்சங்கம் ஆகியவை தலா 1 தொகுதிகள் என போட்டியிட்டன. ஆனால், ஒரு தொகுதியில் கூட இந்த கூட்டணியாலும் வெற்றி பெற முடியவில்லை.
இதேபோன்று பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய இரு கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கின. ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தன.
Related Tags :
Next Story