பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலையில் நெல்லையில் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுத்தாக்கல்


Image courtesy : timesofindia
x
Image courtesy : timesofindia
தினத்தந்தி 12 March 2021 3:05 PM IST (Updated: 12 March 2021 3:11 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகாத நிலையில் அதற்கு முன்பாகவே நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை

அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்க்ப்பட்டு உள்ளது.  இதற்கான பட்டியல் 10-ம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது
 
பா.ஜ.க1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. விளவங்கோடு, 5. ராமநாதபுரம், 6. மொடக்குறிச்சி, 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு, 9. திருக்கோவிலூர், 10. திட்டக்குடி (தனி), 11. கோவை தெற்கு, 12. விருதுநகர், 13. அரவக்குறிச்சி, 14. திருவையாறு, 15. உதகமண்டலம், 16. திருநெல்வேலி, 17. தளி, 18. காரைக்குடி, 19. தாராபுரம் (தனி), 20. மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. எனினும் பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை.

பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சரும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் அடங்கிய குழுவினர் இன்று டெல்லி சென்றுள்ளனர்.

இதில், வேட்பாளர்களின் சாதக, பாதகங்களை அறிந்து இறுதிப் பட்டியலை பாஜக மத்தியத் தேர்தல் குழு இன்று இரவோ, நாளையோ வெளியிட உள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிட இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகாத நிலையில், நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story