5 தொகுதிகளில் பா.ஜ.க.-காங்கிரஸ் பலப்பரீட்சை: அ.தி.மு.க.-தி.மு.க. 134 தொகுதிகளில் நேரடி போட்டி


5 தொகுதிகளில் பா.ஜ.க.-காங்கிரஸ் பலப்பரீட்சை: அ.தி.மு.க.-தி.மு.க. 134 தொகுதிகளில் நேரடி போட்டி
x
தினத்தந்தி 12 March 2021 9:21 PM GMT (Updated: 12 March 2021 9:21 PM GMT)

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க. 134 தொகுதிகளில் நேரடி போட்டியில் ஈடுபடுகின்றன. இதேபோல், பா.ஜ.க-காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், த.மா.கா-காங்கிரஸ் 2 தொகுதியிலும், பா.ம.க-விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியில் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.

சென்னை, 

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (செவ்வாய்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுகிறதோ இல்லையோ, ஆனால் கட்சிகள் கூட்டணி அமைப்பதில்தான், காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கிறது.

இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா., மூவேந்தர் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னணி கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம், புரட்சிப்பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

134 தொகுதிகளில் நேரடி மோதல்

அதேபோல், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இருக்கின்றன.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 178 தொகுதிகளிலும், தி.மு.க. 173 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் பிரதான கட்சிகளான இந்த 2 (அ.தி.மு.க-தி.மு.க.) கட்சிகளும் 134 தொகுதிகளில் நேரடி மோதலில் ஈடுபடுகின்றன.

அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்களின் அடிப்படையிலேயே இந்த மோதல் கணக்கிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இரட்டை இலை, உதயசூரியன் சின்னத்தில் நின்றாலும், அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

பா.ஜ.க.-காங்கிரஸ்

இதேபோல், அகில இந்திய அளவில் எதிரும், புதிருமான கட்சிகளான பா.ஜ.க-காங்கிரஸ், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, குளச்சல், விளவங்கோடு ஆகிய 5 தொகுதிகளில் மல்லுக்கு நிற்கின்றன. மேலும், காங்கிரஸ்-தமிழ் மாநில காங்கிஸ் ஆகியவை ஈரோடு கிழக்கு, கிள்ளியூர் தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

அதேபோல், பா.ம.க- விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் தொகுதியிலும் எதிர், எதிர் துருவங்களாக களத்தில் உள்ளன. இப்படி நிறைய சுவாரஸ்யங்களை 2021-ம் ஆண்டு தேர்தல் களம் கொண்டுள்ளது.

Next Story