‘மு.க.ஸ்டாலின் எத்தனை பொய் சொன்னாலும் தர்மம், நீதி வெல்லும்’ தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘மு.க.ஸ்டாலின் எத்தனை பொய் சொன்னாலும் தர்மம், நீதி வெல்லும்’ தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 13 March 2021 12:12 AM GMT (Updated: 13 March 2021 12:12 AM GMT)

மு.க.ஸ்டாலின் எத்தனை பொய் சொன்னாலும் தர்மம், நீதி வெல்லும் என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம், 

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சித்ராவை ஆதரித்து வாழப்பாடியில் நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வேட்புமனு தாக்கல் இன்று (நேற்று) தொடங்கியது. மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே மக்களை சந்திக்கிறேன். நமக்கு வெற்றி நிச்சயம். இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தலாகும். ஆனால் முடிவில் தர்மம் வெல்லும். இதனால் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

எம்.ஜி.ஆர். என்னென்ன திட்டங்களை செயல்படுத்த நினைத்தாரோ? அதனைத் தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் அவரது வழியில் ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இரவு, பகல் என்று பாராமல் 24 நேரமும் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக உழைத்து வந்தார். ஏழைகள் வாழ்வு உயர பல்வேறு திட்டங்கள் தீட்டினார். ஆனால் தி.மு.க. கொள்ளையடிப்பது, ஊழல் செய்வதுதான் வேலை. இது தான் அவர்களது லட்சியம்.

எத்தனை பொய் சொன்னாலும்...

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தான் தி.மு.க அரசு. தமிழகத்தில் நடக்கிற அ.தி.மு.க. அரசு மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றம் சுமத்தி வருகிறார். என்ன குற்றம் சொன்னாலும் நான் அதற்கு பதில் சொல்கிறேன். திட்டமிட்டு அ.தி.மு.க. அரசு மீது குற்றம் சுமத்துகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெரும்பான்மை தொகுதியில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராகி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் குற்றம் சுமத்துகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். எத்தனை பொய் சொன்னாலும் தர்மம், நீதி வெல்லும். தி.மு.க.வினர் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. ஆனால் நாங்கள் தேர்தலில் என்னென்ன வாக்குறுதி கொடுத்தோமோ? அதனை நிறைவேற்றி இருக்கிறோம்.

தி.மு.க. ஆட்சி அமைந்தால் மக்கள் என்னென்ன சிரமத்தை அடைவார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க. அரசு தொலைநோக்கு பார்வையுடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் செயல்படுத்தவில்லை. தேர்தல் வரும் நேரத்தில் இதுபோன்ற தில்லுமுல்லு வாக்குறுதிகளை வழங்குவார்கள்.

முதன்மை மாநிலம்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்போடு திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. தடுப்பணைகள் பல இடங்களில் கட்டப்பட்டு அங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. விவசாய தானிய உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து விளங்குகிறது.

அதேபோல் கொரோனா காலத்திலும் அதனை கட்டுப்படுத்தி தமிழக அரசு சிறப்பாக விளங்குகிறது. உயர்கல்வியில் 100-க்கு 49 சதவீதம் பேர் உயர்கல்வி படிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உயர்கல்வி படிப்பில் இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

விவசாயி உழைக்க பிறந்தவன். அதுபோல நானும் விவசாயி. தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்துள்ளேன். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.

கட்டப்பஞ்சாயத்து

தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது. வந்தால் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். கட்டப்பஞ்சாயத்து வந்துவிடும். எங்கள் ஆட்சியில் மக்கள்தான் முதல்-அமைச்சர். இந்த மாவட்டத்தின் மூலம் என்னை முதல்-அமைச்சர் ஆக்கினீர்கள். நீங்கள்தான் முதல்-அமைச்சர். நீங்கள் என்னென்ன கட்டளையிடுகிறீர்களோ அதை நிறைவேற்றி உள்ளேன். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது. இதனால் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

Next Story