போடி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டி ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்


போடி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டி ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 13 March 2021 12:19 AM GMT (Updated: 2021-03-13T05:49:19+05:30)

போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகம் முழுவதும் முதல் நாளில் 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

தேனி, 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

முதல் நாளில் சுயேச்சைகள் மட்டுமின்றி அரசியல் கட்சி வேட்பாளர்களும் மனு செய்தனர்.

போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக துணை முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகவும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இவர் 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் 3-வது முறையாக அவர் போடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதற்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேற்று போடிக்கு வந்த அவர் அங்குள்ள சாலை காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து பிரசார வேனில் நின்றபடி போடி தாலுகா அலுவலகத்துக்கு வந்தார்.

வேட்புமனு தாக்கல்

பிற்பகல் 1.55 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடைய மகனும், தேனி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

2 முறை என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த போடி தொகுதி மக்களுக்கு சேவை புரிவதை ஒரே குறிக்கோளாக கொண்டு மீண்டும் போடி தொகுதியில் களத்தில் நிற்கிறேன். மக்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

2011-ல் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி, பொற்கால ஆட்சியை நடத்தி காட்டினார். அதனால் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் வெற்றியின் மூலம், ஆண்ட கட்சி மீண்டும் ஆளுகின்ற உரிமையை 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா பெற்றுத்தந்தார்.

மீண்டும் அ.தி.மு.க. அரசு

இன்றைக்கு தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அனைத்து திட்டங்களையும் எந்தவொரு சேதம் இல்லாமல், குறைவு இல்லாமல் அப்படியே நடைமுறைப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு தான் சிறப்பாக செயல்பட்டது என்று பிரதமரே பாராட்டும் அளவுக்கு மக்களின் இன்னல்களை போக்கும் அரசாக நமது அரசு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் தான் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. தமிழக மக்கள் மீண்டும் அ.தி.மு.க. அரசு தான் வரும் என்று நல்ல தீர்ப்பை வழங்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த போது தனது சொத்து பட்டியலை தாக்கல் செய்யவில்லை. இந்த பட்டியலை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தாக்கல் செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் தெரிவித்தார்.

அமைச்சர்திண்டுக்கல் சீனிவாசன்

இதேபோல் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது சொத்து விவரத்தை சமர்ப்பிக்கவில்லை. வருகிற 15-ந் தேதி சொத்து விவரத்தை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

இதேபோல் கடலூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை

வேட்பு மனு தாக்கலின் முதல்நாளான நேற்று எதிர்பார்த்தபடி யாருமே வரவில்லை. சென்னையை பொறுத்தவரை 15 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆர்.கே.நகரில் 3 பேரும், வில்லிவாக்கத்தில் 2 பேரும், பெரம்பூரில் ஒருவர் என மொத்தம் 6 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தனர்.

போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சார்பில் 3 மனுக்களும், மாற்று வேட்பாளராக ஆர்.டி.கணேசன் சார்பில் ஒரு மனுவும் என மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல எடப்பாடியில் அக்னி ஸ்ரீராமச்சந்திரன் என்பவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

56 மனுக்கள் தாக்கல்

இதுதவிர திருநெல்வேலி தொகுதியில் 3 மனுக்களும், அம்பத்தூர், திருவொற்றியூர், மேட்டூர், சேலம் வடக்கு, காங்கேயம், திண்டுக்கல் தொகுதிகளில் தலா 2 மனுக்களும், ஆவடி, பல்லாவரம், வேலூர், கே.வி.குப்பம், திருப்பத்தூர், உளுந்தூர்ப்பேட்டை, எடப்பாடி, நாமக்கல், மொடக்குறிச்சி, திருப்பூர் வடக்கு, சூலூர், கோவை வடக்கு, ஆத்தூர், கரூர், குன்னம், கடலூர், சிதம்பரம், திருவாரூர், மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், திருச்சுழி, திருவாடானை, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, ராதாபுரம், நாகர்கோவில், போளூர், ஆரணி, உதகமண்டலம் தொகுதிகளில் தலா ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆகும்.

அந்தவகையில் மொத்தம் 54 பேர் மனுத்தாக்கல் செய்து உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் 3 மனுத்தாக்கல் செய்து உள்ளதால் மொத்தம் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேட்டூர் தொகுதியில் பானுப்பிரியா என்ற ஒரு பெண் மனு தாக்கல் செய்துள்ளளார்.

வேட்பு மனு தாக்கல் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமையும்) விடுமுறை நாட்கள் ஆகும்.

Next Story