கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதால் நிச்சயமாக எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதால் நிச்சயமாக எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 13 March 2021 10:41 AM GMT (Updated: 13 March 2021 10:41 AM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 சேலம்

சேலத்தில் 2 ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், அதிமுக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, கூட்டத்திற்கு வந்த முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

வேட்பாளர் பட்டியல் தொடர்பான அதிப்ருதி அனைத்து கட்சிகளிலும் பொதுவாக இருப்பது தான் என்றும், அவை பேசி சரிசெய்யப்படும் என்றார்.  கூட்டணியில் ஒரே தொகுதியை எல்லா கட்சிகளும் கேட்கும்போது பேசித்தான் தீர்க்க வேண்டும். கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் பழி சுமத்துவது தவறு.

ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கிக்கு ஏற்றவாறுதான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும். கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதால் நிச்சயமாக எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பக்குவமில்லாத அரசியலை தேமுதிகவினர் கையாள்வதாகவும், கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் விமர்சனம் செய்வது சரியல்ல, அழகல்ல .

புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இல்லை.

தேர்தலுக்காக வாக்குறுதி அளிக்கும் கட்சி அதிமுக அல்ல. மக்கள் தேவைகளை அறிந்து தேர்தலுக்கு முன்னதாகவே, பயிர்க்கடன், நகைக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. 

தேர்தல் முடிவுகள் குறித்து வெளியாகும் கருத்து கணிப்புகள் பொய்யானவை. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியுறும் என கருத்து கணிப்புகள் வெளியானது. ஆனால், இரு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது.மக்கள்தான் நீதிபதி, மக்கள் இந்த தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்

திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அறிக்கையை முழுமையாக படித்த பின்னரே கருத்துக் கூறமுடியும் என முதலமைச்சர் கூறினார்.

முன்னதாக கட்சி நிர்வாகிகளின் ஆலோசனையில் பேசிய முதலமைச்சர், தேர்தல் பணியில் எந்த தொய்வும் இருக்கக்கூடாது என வலியுறுத்தியதோடு, அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் தேனீக்கள் போல், அயராது பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Next Story