பொய் வாக்குறுதிகள் இருட்டாய் கவிந்திருக்கும் சூழலில் கையில் ‘டார்ச் லைட்' வைத்து ஒளிகாட்டும் வேட்பாளர்களை ஆதரியுங்கள்
பொய் வாக்குறுதிகள் இருட்டாய் கவிந்திருக்கும் சூழலில் கையில் ‘டார்ச் லைட்' வைத்துக்கொண்டு ஒளிக்காட்டிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு, வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் மனம் திறந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வாக்காளர்களுக்கு எழுதிய மனம் திறந்த கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘தேர்தல் என்பது தேசியப் பரீட்சை’ என்று கவிஞர் இளந்தேவனின் பாடல் ஒன்று உண்டு. அந்தப் பரீட்சையில், ‘வாக்கு’ என்ற மதிப்பெண் போடவேண்டிய ஆசிரியர்களாக வாக்காளர்களான நீங்கள் இருக்கிறீர்கள். மதியோடு போடவேண்டியது அந்த மதிப்பெண். தேர்தல் நேரத்தில் மாத்திரம் உங்களை மகிழ்விக்கும் வாக்குறுதிகளோடு உங்களிடம் பலரும் வருவார்கள். இனிக்கும் சொற்களில் ஏமாந்துவிட மாட்டீர்கள். ஆனாலும் சில விஷயங்களைச் சொல்லுகிறேன்.
உங்களுக்கே தெரிந்த விஷயத்தை மீள்நினைவுபடுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். கூப்பிய கைகளோடும் ஆசை காட்டும் கண்களோடும் வாக்குகளுக்காக உங்களை தேடிவரும் ஏராளமான நபர்களில் நண்பரை எப்படி இனம் காண்பீர்கள்? நல்லவரை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? அதற்கெனச் சில அடையாளங்கள் உண்டு. கவனித்துப் பாருங்கள். எப்போதும் உங்கள் பார்வைக்கு அகப்படாமல் இருந்து, அரிதாகவே தட்டுப்படுபவர்களே ஏற்கெனவே நீங்கள் அறிந்த அரசியல்வாதிகள். அப்படி எழுந்தருளும்போதும், ‘சைரன்'கள் ஒலிக்க, வாகனங்களின் தலைகளில் விளக்குகள் சுழல, உங்கள் போக்குவரத்தை நிறுத்திவிட்டு, தங்கள் போக்குவரத்தில் போய்விடுவார்கள்.
தன் குரலை ஒலிப்பவராக...
உங்களுக்காக உண்மையாக உழைக்க விரும்புபவர் என்றால், தான் சொன்ன சொற்களைக் காப்பாற்றும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவார். திடீரென்று எழுந்த உள்ளூர் பிரச்சினைகளிலும் யாரும் சொல்லாமல் வந்து நிற்பார். நீங்கள் தேடிப்போய் ஒலிக்கும் குரலை கேட்பவராகவோ கேட்காதவராகவோ அல்ல, உங்களுக்காகத் தொடர்ந்து தன் குரலை ஒலிப்பவராக அவர் இருப்பார்.
‘தன் பெண்டு தன் பிள்ளை சோறு, வீடு, சம்பாத்தியம் இவை உண்டு தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்’ என்றாரே பாரதிதாசன் அதைப்போல, தன் குடும்பம், தன் சாதி, தன் மதம் என்று பித்துப் பிடிக்காதவராகவும், பிற சாதி, பிற மதத்தின் மேல் துவேஷம் கொள்ளாதவராகவும் இருப்பார். ஏற்கனவே பதவியில் இருந்தவராக இருந்தால், அவர் பொதுவாழ்வில் வெளிப்படையானவராக இருந்தாரா? என்பதைப் பாருங்கள்.
நல்ல வேட்பாளர்
எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்னால் சொந்தமாக வங்கிக் கணக்கே இல்லாமல் இருந்து, பதவிக்கு வந்த பிறகு வங்கிக்கே சொந்தக்காரராக ஆனாரா? என்று பாருங்கள். நல்ல வேட்பாளர், தன் தொகுதியில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை உள்ளங்கையிலும் மனதிலும் வைத்திருப்பார். நீங்கள் போய்ப் பாதிப் பிரச்சினையை சொல்லும்போதே மீதிப் பிரச்சினையை அவர் சொல்வார். ‘எங்களுக்கு ஓட்டுப் போடாவிட்டால், அரசின் திட்டங்கள் உங்களுக்கு கிடைக்காது’ என்று அறைகூவல் விடும் அரைகுறைகளைக் கவனியுங்கள்.
அவர்கள் நமக்கானவர்கள் அல்லர். பாதிபேர் வாக்களித்து பதவிக்கு வந்தாலும் மீதிபேருக்கும் அவர்தான் பிரதிநிதி என்கிற பிரக்ஞை அவருக்கு இருக்கிறதா பாருங்கள். நமக்காக, நம்மால், நாமே என்ற, அனைவரையும் இணைத்துச் செயல்படும் மனோபாவம் இருக்கிறதா என்று பாருங்கள். தான் வகிப்பது பெரும் பொறுப்பாக இருந்தாலும், தன் எல்லைக்குள் நடந்துவிட்டது பெரும் சம்பவமாக இருந்தாலும் அதைத் தொலைக்காட்சி செய்தியில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் அரசியல்வாதிகளைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு மாறானவர் நல்ல வேட்பாளர்.
கையில் ‘டார்ச் லைட்’ வைத்து ஒளிகாட்டுவார்
எந்த வேலையாக இருந்தாலும், பிறர் வந்து சேரும்முன் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் இருப்பார் நீங்கள் ஆதரிக்க வேண்டிய வேட்பாளர். அந்தப் பிரச்சினை தீரும்வரை அங்கிருந்து அகலமாட்டார் என்பது அவரை நீங்கள் நம்பவேண்டும் என்பதற்கான அத்தியாவசிய அடையாளம். உங்களுக்கும் அதிகாரத்தின் தலைமைக்கும் இடையே ஏஜென்டாக அல்ல, நுழைவுக் காசு கேட்காத பாலமாக இருப்பார்.
பொய் வாக்குறுதிகள் இருட்டாய்க் கவிந்திருக்கும் சூழலில் கவனமாய்ப் பாருங்கள். அப்படிப்பட்ட வேட்பாளர் உங்களுக்குக் கிடைப்பார். கையில் டார்ச் லைட் வைத்து ஒளிகாட்டிக்கொண்டிருப்பார். அவரை ஆதரியுங்கள். இருட்டில் இருந்து வெளிச்சத்துக்குச் செல்வோம். பொய்களில் இருந்து உண்மைகளுக்குச் செல்வோம். அழிவில் இருந்து வாழ்வுக்குச் செல்வோம். இம்முறையேனும் வெல்வது தமிழகமாக இருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story