தாராபுரம்-எல்.முருகன், ஆயிரம் விளக்கு-குஷ்பு பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


தாராபுரம்-எல்.முருகன், ஆயிரம் விளக்கு-குஷ்பு பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 15 March 2021 5:54 AM IST (Updated: 15 March 2021 5:54 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தாராபுரத்தில் எல்.முருகனும், ஆயிரம் விளக்கில் நடிகை குஷ்புவும், கோவை தெற்கில் வானதி சீனிவாசனும், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தியும் களம் காண்கின்றனர்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அ.தி. மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு 6 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பசும்பொன் தேசிய கழகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.178 தொகுதிகளுக்கானவேட்பாளர்களை அறிவித்துள்ளது. பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியலை நேற்று முன்தினம் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்பட நிர்வாகிகள், டெல்லியில் உள்ள தேசிய தலைமையிடம் கொடுத்தனர். இதனால் எந்த நேரத்திலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

எல்.முருகன்-குஷ்பு-வானதி சீனிவாசன்

இந்தநிலையில், முதல் கட்டமாக தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தாராபுரம் (தனி) - எல்.முருகன் (பா.ஜ.க. மாநில தலைவர்), துறைமுகம்-வினோஜ் பி. செல்வம் (பா.ஜ.க. இளைஞரணி தலைவர்), ஆயிரம் விளக்கு-நடிகை குஷ்பு (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பொறுப்பாளர்), திருவண்ணாமலை-எஸ்.தணிகைவேல், திருக்கோவிலூர்- முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன், மொடக்குறிச்சி-சி.கே.சரஸ்வதி, கோவை தெற்கு-வானதி சீனிவாசன் (தேசிய மகளிரணி தலைவர்),

அரவக்குறிச்சி-முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை (தமிழக பா.ஜ.க. துணை தலைவர்), திட்டக்குடி (தனி) -டி. பெரியசாமி, திருவையாறு-பூண்டி வெங்கடேசன், காரைக்குடி-எச்.ராஜா (பா.ஜ.க. தேசிய செயலாளர்), மதுரை வடக்கு- டாக்டர் பி.சரவணன், விருதுநகர்-ஜி.பாண்டுரங்கன், ராமநாதபுரம்-டி.குப்புராம், திருநெல்வேலி-நயினார் நாகேந்திரன், நாகர்கோவில்-எம்.ஆர்.காந்தி (மூத்த தலைவர்), குளச்சல்-பி.ரமேஷ்.

முதல் கட்டமாக 17 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 தொகுதிகளுக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கவேண்டியது உள்ளது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போதுஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி நிச்சயம் பா.ஜ.க.வுக்கே கொடுக்கப்படும் என்றுகருதப்பட்டது. இதற்கு அந்த தொகுதியில் பா.ஜ.க. பொறுப்பாளராக நடிகை குஷ்பு களம் இறக்கப்பட்டது தான் முக்கிய காரணம் ஆகும். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு தான் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதேபோல தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவியும் ஒரு கூட்டத்தில், மக்களிடையே குஷ்புக்கு வாக்களிப்பீர்களா? என்று கேட்டு குஷ்பு போட்டியிடுவதற்கான யூகத்துக்கு வழிவகுத்தார்.

இதனால் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு மிகவும் கவனம் செலுத்தினார். வீடு, வீடாக சென்று பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். மோட்டார் சைக்கிளில் சென்றும், பெண்களுடன் சகஜமாக நடனமாடியும், குடிசைவாசிகளுடன் சாலையோர கடையில் 'டீ' குடித்தும் என அந்த பகுதிவாசிகளின் கவனத்தை ஈர்த்து வந்தார். மேலும் அந்த தொகுதிக்கு உட்பட்ட அண்ணாசாலையில் நவீன தொழில்நுட்பத்தில் கன்டெய்னரில் தேர்தல் பணிமனை ஒன்றையும் குஷ்பு அமைத்தார். அவர் தான் வேட்பாளர் என்று அறுதியிட்டு கூறும் அளவுக்கு குஷ்புவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் அமைந்தது.

நயினார் நாகேந்திரன்-வானதி சீனிவாசன்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் சவாலான வேட்பாளராக குஷ்பு நிச்சயம் இருப்பார் என்று ஆரூடமும் கூறப்பட்டது. இந்தநிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பா.ம.க.வுக்கு, அ.தி.மு.க. கொடுத்தது. இந்தநிலையில் நேற்று வெளியிடப்பட்ட பா.ஜ.க. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த கு.க.செல்வத்துக்கு பா.ஜ.க. சார்பில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் எழிலன் போட்டியிடுகிறார்.

திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் வேட்பாளர் பட்டியல் வெளியாகுவதற்கு முன்பே அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். வேட்பாளர் தான் அறிவிக்கப்படுவேன் என்ற உறுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படியே அவருடைய பெயர் வேட்பாளர் பட்டியலில் வெளியாகியிருக்கிறது. கோவை தெற்கில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story