மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் திருவாரூரில் இருந்து பிரசாரத்தையும் தொடங்குகிறார்
திருவாரூரில் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மாலையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். முன்னதாக அவர், சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டார். ‘ஒன்றிணைவோம் வா..’, ‘மக்கள் கிராம சபை கூட்டம்’, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’, ‘ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தர போராரு’, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்று விதவிதமான தலைப்புகளில் அவரது பிரசார பயண திட்டம் அமைந்தது.
இந்தநிலையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற மக்கள் குறைகேட்பு பிரசார பயணத்தை மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிறைவு செய்தார்.
திருவாரூரில் தொடக்கம்
இதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறார். இதுகுறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி (இன்று) கருணாநிதி பிறந்த மண், திருவாரூர் தெற்கு ரத வீதியில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்குகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல்
மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக வேட்பாளராக போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டபோது, ‘சென்னை கொளத்தூர் தொகுதியில் 15-ந் தேதி (இன்று) வேட்புமனு தாக்கல் செய்வேன்’ என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடம் அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள மாநகராட்சி பழைய மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ளது. அங்கு கொளத்தூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை இணை இயக்குனர் எம்.தங்கவேலுவிடம் மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story