தமிழக சட்டசபை தேர்தல்: 4வது கட்ட அ.ம.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


தமிழக சட்டசபை தேர்தல்:  4வது கட்ட அ.ம.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 15 March 2021 5:46 AM GMT (Updated: 15 March 2021 6:26 AM GMT)

தமிழக சட்டசபைக்கான தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க.வின் 4வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. 

தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிடுகிறது.  அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தொகுதி உடன்பாடு விவகாரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது.  இதன்பின்னர், தே.மு.தி.க.-அ.ம.மு.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது.  இதில், சுமுக உடன்பாடு எட்டப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.  தே.மு.தி.க.வுக்கு கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 11ந்தேதி, அ.ம.மு.க. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  இதில், டி.டி.வி. தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வில் இருந்து விலகி அ.ம.மு.க.வில் இணைந்த ராஜவர்மன் எம்.எல்.ஏ மீண்டும் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 12ந்தேதி, 130 பேர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திரபாலாஜியை எதிர்த்து அ.ம.மு.க. சார்பில் காளிமுத்து போட்டியிடுகிறார்.

அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 195 பேர் கொண்ட பட்டியல் 3 கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அக்கட்சி சார்பில் போட்டியிடும் 4வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.  அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.  தினகரன் எம்.எல்.ஏ.வாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் டாக்டர் காளிதாஸ் போட்டியிடுகிறார்.

Next Story