ஜின்னாவின் பாதையில் ராகுல் காந்தி நடக்கிறார் - சிவ்ராஜ் சிங் சவுகான்


ஜின்னாவின் பாதையில் ராகுல் காந்தி நடக்கிறார் - சிவ்ராஜ் சிங் சவுகான்
x
தினத்தந்தி 15 March 2021 1:02 PM GMT (Updated: 15 March 2021 1:02 PM GMT)

ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் பாதையில் நடக்கவில்லை என்றும் ஜின்னாவின் பாதையில் நடக்கிறார் என்று மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார்.

அசாம்,

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், முன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகாகூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி இடம்பெற்றுள்ளது. 

தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்மந்திரியாக சர்பானந்த சோனாவால் செயல்பட்டு வருகிறார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அசாமில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அம்மாநிலத்தின் நகர்கதியா பகுதியில் மத்தியபிரதேச முதல்-மந்திரி மற்றும் பாஜக தலைவர் சிவ்ராஜ் சிங் சவுகான் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். 

அப்போது அவர் பேசுகையில், ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் பாதையில் நடக்கவில்லை, ஜின்னாவின் பாதையில் நடக்கிறார், ஜின்னாவின் பாதையை அசாம் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதனை இந்திய மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அசாமில் பசி, வேலையின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை காங்கிரஸ் வழங்கியது. அவர்களின் ஆட்சியின் கீழ் அரசு அபிவிருத்தி செய்யவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சர்பானந்தா சோனோவால் தலைமையில், அசாம் வளர்ச்சியின் பாதையில் முன்னேறத் தொடங்கியது.

ஒருபுறம், ராகுல் ஜி கடலில் டைவிங் செய்கிறார், மறுபுறம், பிரியங்கா காந்தி தேயிலை தோட்டங்களில் தேயிலை இலைகளை பறித்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் தேயிலை இலைகளைப் பறித்தீர்களா அல்லது ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தீர்களா ? என கேள்வி எழுப்பினார்.

Next Story