தமிழகம் முழுவதும் 959 வேட்புமனுக்கள் தாக்கல்


தமிழகம் முழுவதும் 959 வேட்புமனுக்கள் தாக்கல்
x
தினத்தந்தி 15 March 2021 9:04 PM GMT (Updated: 15 March 2021 9:04 PM GMT)

தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் தொடங்கிய 2 தினங்களில் 959 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. நேற்று 2-வது நாளாக தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் நடந்தது.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான அணி, தி.மு.க. தலைமையிலான அணி, அ.ம.மு.க. தலைமையிலான அணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணி, நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. இதுதவிர ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான அணியும், சுயேச்சைகளும் களத்தில் உள்ளன.

முதல்-அமைச்சர் வேட்பாளர்கள்

அ.தி.மு.க. தலைமையிலான அணியில் முதல்-அமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைமையிலான அணியில் முதல்-அமைச்சர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. தலைமையிலான அணியில் முதல்-அமைச்சர் வேட்பாளரான டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியில் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளரான அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய 5 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இவர்கள் 5 பேரும் அந்த கட்சிகளின் தலைமையிலான அணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

959 வேட்புமனுக்கள் தாக்கல்

வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடந்தது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை சரிபார்த்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகிறார்கள். நேற்று இரவு 10.45 மணி வரையிலான நிலவரப்படி வேட்புமனு தாக்கல் நடைபெற்ற, கடந்த 2 தினங்களில் தமிழகம் முழுவதும் 959 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் 807 வேட்புமனுக்களும், பெண்கள் 152 வேட்புமனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Next Story