பொது சின்னம் கேட்டு சமத்துவ மக்கள் கட்சி வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
பொது சின்னம் கேட்டு சமத்துவ மக்கள் கட்சி வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை.
சென்னை,
சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் சுந்தரேசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் கட்சி கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் சரத்குமாரால் தொடங்கப்பட்டது. இதுவரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். எனவே, எங்கள் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த 1-ந் தேதி மனு கொடுத்தோம். பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கபடாத கட்சிக்கு 2 பொது தேர்தல்களில் பொது சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த 2015-ம் ஆண்டு விதிகள் உருவாக்கியது. அதன்படி, பொது சின்னம் கேட்டு கோரிக்கை முன்வைத்தும், இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந் தேதியுடன் முடிவடைவதால், தாமதமில்லாமல் எங்கள் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். தாமதமாக சின்னம் ஒதுக்கினால் பிரசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story