‘தளபதிகளை களத்தில் இறக்கி உள்ளேன்’ என அறிவிப்பு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஆதரவாளர்கள் 36 தொகுதிகளில் போட்டி


‘தளபதிகளை களத்தில் இறக்கி உள்ளேன்’ என அறிவிப்பு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஆதரவாளர்கள் 36 தொகுதிகளில் போட்டி
x
தினத்தந்தி 15 March 2021 10:00 PM GMT (Updated: 2021-03-16T03:30:01+05:30)

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் ஆதரவாளர்கள் 36 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

சென்னை, 

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், அரசியலில் கால் பதிப்பது தொடர்பாக கடந்த மாதம் (பிப்ரவரி) 21-ந் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்பு, அந்த கூட்டத்தில் திரண்டிருந்த இளைஞர்கள் மத்தியில், ‘அரசியல் களம் காண்போம்’ என அறிவித்தார்.

இந்த நிலையில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு சகாயம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

36 தொகுதிகளில் போட்டி

அரசியலில் ஈடுபடுவது என முடிவு செய்த சில நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் எங்களது கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய போதிய அவகாசம் கிடைக்கவில்லை. எனவே, தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழக கட்சி மற்றும் சகாயம் அரசியல் பேரவை ஆகியவற்றின் மூலம் அரசியலில் களம் காண்பது என முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் 20 தொகுதிகளில், சகாயம் அரசியல் பேரவை சார்பில் என்னைப் போல் ஒரே எண்ணம் கொண்டவர்கள் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகள், வளமான தமிழகம் கட்சி ஒரு தொகுதி என மொத்தம் 36 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

மத வெறுப்பு அரசியல்

அரசியல் அமைப்பு முகப்புரையில் இருப்பதுபோல் மதம், சாதி உள்ளிட்ட வெறுப்பு அரசியலை நாங்கள் நிராகரிக்கிறோம். ஊழலை எதிர்க்கிறோம். வளமான, நேர்மையான தமிழகம் அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. இதை முன்னிறுத்தியே எங்கள் தேர்தல் அறிக்கை அமையும். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற ஊழல்களை கண்காணித்து அதை தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய தன்னார்வலர்களை கேட்டுக்கொண்டுள்ளோம். நாங்கள் சுயமாக சிந்தித்து தயாரித்த தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடுவோம்.

நான் போட்டியிடவில்லை...

இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது தளபதிகளான இளைஞர்களை களத்தில் இறக்கி உள்ளேன். அவர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்பு, முதல்கட்டமாக 17 வேட்பாளர்களை சகாயம் அறிமுகப்படுத்தினார். மற்ற 19 வேட்பாளர்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். முதல்கட்ட வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

கடலூர்-புஷ்பராஜ், சென்னை அண்ணாநகர்-எஸ்.பி.பிரபாகரன், ஆவடி-பாலசுப்பிரமணியன், விருதாச்சலம்-கேசவபெருமாள், ஆலந்தூர்-கமலக்கண்ணன், மதுரை (மேற்கு) -நாகஜோதி, ஓமலூர்-கருநாகமுத்து, மயிலாடுதுறை-ராஜ்குமார், கவுண்டம்பாளையம்-சிவா, கோவை (வடக்கு) -துரைராஜ், கொளத்தூர்-சுரேஷ் மாணிக்கம், செங்கல்பட்டு-வேல்முருகன், ராயபுரம்-ஜேம்ஸ் மார்ட்டின், வேப்பனஹள்ளி-தங்கபாண்டியன், திருவாரூர்-தியாகசுந்தரம், பல்லாவரம்-கோகுலகிருஷ்ணன், வில்லிவாக்கம்-ஜெகதீஸ்வரன்.

Next Story